கொள்முதல் நிறுத்த போராட்டம்: கர்நாடகத்தில் இன்று பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடலா?


கொள்முதல் நிறுத்த போராட்டம்: கர்நாடகத்தில் இன்று பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடலா?
x

கர்நாடகத்தில் இன்று பெட்ரோல் விற்பனை நிலையங்கள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல்-டீசல் மீதான வரியை வெகுவாக குறைத்தது. இதனால் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.101.94 ஆகவும், டீசல் விலை லிட்டர் ரூ.87.89 ஆகவும் குறைந்துள்ளது. இந்த வரி குறைப்பு காரணமாக பெட்ரோல் விற்பனையாளர்களுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த வருவாய் பற்றாக்குறையை சரிசெய்ய கோரி 31-ந் தேதி (இன்று) நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விற்பனை முகவர்கள் எரிபொருள் கொள்முதல் நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

இதனால் கர்நாடகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்கள் மூடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை கர்நாடக பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் மறுத்துள்ளது.

இதுகுறித்து அந்த சங்க நிர்வாகி கூறுகையில்,

"பெட்ரோல்-டீசல் மீதான வரி திடீரென குறைக்கப்பட்டதால் எங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை சரிசெய்ய கோரி நாங்கள் நாளை (இன்று) எண்ணெய் கிடங்குகளில் இருந்து எரிபொருள் கொள்முதலை ஒரு நாள் மட்டும் நிறுத்த முடிவு செய்துள்ளோம். ஆனால் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் வழக்கம் போல் செயல்படும். இந்த நிலையங்கள் மூடப்படும் என்று வெளியான தகவல் தவறானது" என்றார்.


Next Story