டெல்லியில் இரவில் திடீர் வானிலை மாற்றம்; 10 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
டெல்லியில் இரவில் திடீரென்று ஏற்பட்ட வானிலை மாற்றத்தினால், 10 விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டு உள்ளன.
புதுடெல்லி,
டெல்லியில் கோடை காலத்தில் வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசி மக்களை பாதித்தது. இந்நிலையில், டெல்லியின் ஜந்தர் மந்தர் உள்பட பல நகர பகுதிகளில் இரவில் வானிலை மாற்றம் ஏற்பட்டது.
இதனால், சில பகுதிகளில் மழை பெய்தது. கோடையின் வெப்பம் தணிந்து, குளிரான சூழல் காணப்பட்டது. மக்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியது. வாகனங்களும் மழை நீரில் மெதுவாக சென்றன.
எனினும், இந்த திடீர் வானிலை மாற்றம் எதிரொலியாக டெல்லியில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன்படி, மாலை 6.25 மணியில் இருந்து இரவு 8 மணி வரையில் 10 விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டு உள்ளன.
இவற்றில் 9 விமானங்கள் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகருக்கு திருப்பி விடப்பட்டு உள்ளன. ஒரு விமானம் லக்னோ நகருக்கு திருப்பி விடப்பட்டு உள்ளது. இந்த விவரங்கள் பயணிகளுக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளன.