மாரிதாசுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு


மாரிதாசுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 14 Nov 2022 9:45 PM GMT (Updated: 14 Nov 2022 9:46 PM GMT)

இந்த மனுவை நீதிபதி விசாரித்து மாரிதாஸ் மீதான வழக்கை ரத்துசெய்ய உத்தரவிட்டார்.

புதுடெல்லி,

யூடியூப் பிரமுகர் மாரிதாஸ் கொரோனா முதல் அலை பரவிய காலத்தில் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரிக்க, குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர்தான் காரணம் என சித்தரிக்கும் வகையில் சர்ச்சை வீடியோ வெளியிட்டிருந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதை எதிர்த்து ஐகோர்ட்டு மதுரை கிளையில் அவர் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி விசாரித்து மாரிதாஸ் மீதான வழக்கை ரத்துசெய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல் சஞ்சய் ஹெக்டே ஆஜராகி, 'சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் கடமை மாநில அரசுக்கு உள்ளது. இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுகிறார். அது குறிப்பிட்ட சமூகத்தினரை பாதிக்கிறது. இதே போன்ற பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, மனுதாரர் மீதான வழக்கை ரத்துசெய்ய உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்' என வாதிட்டார்.

வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன், இந்த தள்ளுபடி உத்தரவு மாரிதாஸ் மீதான நிலுவை வழக்குகளை பாதிக்காது என்றும் தெளிவுப்படுத்தினர்.


Next Story