ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊழல் தடுப்பு நீதிமன்றம் அமைக்க கோரிய மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊழல் தடுப்பு நீதிமன்றம் அமைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி,
நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தை அமைக்க கோரி பா.ஜ.க.வை சேர்ந்த அஸ்வினி குமார் உபாத்யாய் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
மனுவை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தை அமைத்தால், பிற நீதிமன்றங்களின் சுமை அதிகரிக்கும் என தெரிவித்ததுடன், சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எவ்வளவு காலம் பிடிக்கிறது? என்றும் கேள்வி எழுப்பியது.
இதுதொடர்பாக பொதுவெளியில் எவ்வித தகவலும் இல்லை என மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் விஜய் ஹன்சாரியா தெரிவித்தார். விசாரணை அமைப்பு அதிக காலம் எடுத்துக் கொண்டால், அதில் எப்படி தலையிட முடியும் என சுப்ரீம் கோர்ட்டு கேட்டது.
இதைத்தொடர்ந்து, நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தை அமைக்க கோரிய பொதுநல மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.