மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சென்ற ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சென்ற ஹெலிகாப்டர் இன்று அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
கொல்கத்தா,
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதனையொட்டி, மேற்கு வங்காள முதல்-மந்திரி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி ஜல்பைகுரியில் கிரிந்தி பகுதியில் நடந்த ஒரு பொது கூட்டம் ஒன்றில் இன்று கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் மத்தியில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான அரசை தாக்கி பேசினார். வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைவோம் என தெரிந்து அக்கட்சி வெவ்வேறு குழுக்கள் மற்றும் சமூகத்தினரிடம் ஆதரவு திரட்ட முயலவில்லை என்று பேசியுள்ளார்.
அதன்பின்பு அவர், பேக்தோக்ரா பகுதிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார். எனினம் அவரது ஹெலிகாப்டர், செல்ல வேண்டிய இடத்திற்கு பதிலாக செவோக் விமான படை தளத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. தெளிவற்ற வானிலையால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் மம்தா பானர்ஜிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் பாதுகாப்பாக உள்ளார் என்றும் அக்கட்சியை சேர்ந்த ரஜிப் பானர்ஜி கூறியுள்ளார்.