கோசாலை நிலத்திற்கு பட்டா வழங்கிய விவகாரம்; பெண் கணக்காளர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்


கோசாலை நிலத்திற்கு பட்டா வழங்கிய விவகாரம்; பெண் கணக்காளர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்
x

கோசாலை நிலத்திற்கு பட்டா வழங்கிய விவகாரத்தில் பெண் கணக்காளர் உள்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் ரமேஷ் உத்தரவிட்டார்.

சிக்கமகளூரு;

கலெக்டருக்கு கடிதம்

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகாவில் பாலூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அரசுக்கு சொந்தமான கோசாலை நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிலர் சட்டவிரோதமாக பட்டா பெற்றதாக கூறப்படுகிறது.

மேலும், இதுதொடர்பான புகார்கள் கர்நாடக வருவாய்த்துறை அலுவலகத்திற்கு வந்தன. அதன் பேரில் வருவாய்த்துறை அதிகாரி மஞ்சுநாத் கோசாலை நிலத்திற்கு பட்டா பெற்ற விவகாரம் குறித்து விசாரணை நடத்த சிக்கமகளூரு மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பினார்.

3 பேருக்கு தொடர்பு

அதன்பேரில் மாவட்ட நிர்வாகம் சிக்கமகளூருவில் சர்ச்சைக்குள்ளான கிராமங்களில் தீவிர விசாரணை நடத்தியது. மேலும், கிராம பஞ்சாயத்து அலுவலக ஆவணங்களை ஆய்வு செய்தது. அதில் சட்டவிரோதமாக கோசாலைக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா வழங்கப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து நடத்திய விசாரணையில் கோசாலை நிலத்திற்கு பாலூர் கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியான நரேஷ், கெலகூர் கிரிஷ் மற்றும் மூடிகெரே தாலுகா அலுவலகத்தில் கணக்காளராக பணி செய்யும் கீதா ஆகிய 3 பேர் சட்டவிரோதமாக பட்டா வழங்கியது தெரியவந்தது.

பணியிடை நீக்கம்

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் ரமேஷ் உத்தரவிட்டார். மேலும், அவர்களிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார். அதில் கோசாலை நிலத்திற்கு பட்டா வழங்க உடந்தையாக மூடிகெரே தாசில்தார் ரமேஷ் மற்றும் தாலுகா அலுவலக உயர் அதிகாரி பாலய்யா ஆகிய 2 பேர் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் ரமேஷ் உத்தரவிட்டார். மேலும், அவர் சிக்கமகளூருவில் உள்ள கோசாலைகளுக்கு சொந்தமான நிலங்கள் குறித்து ஆய்வு நடத்த உத்தரவிட்டார்.


Next Story