பெங்களூருவில் கைவரிசை காட்ட சென்ற வீட்டிலேயே தற்கொலை செய்த திருடன்
பெங்களூருவில் திருட சென்ற வீட்டிலேயே திருடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு:
தூக்கில் தொங்கிய நபர்
பெங்களூரு இந்திராநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொழில் அதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில 20 நாட்களுக்கு முன்பு தொழில் அதிபர் தனது குடும்பத்தினருடன் ஐரோப்பாவுக்கு சுற்றுலா சென்று இருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் தொழில் அதிபரும், அவரது குடும்பத்தினரும் வீடு திரும்பினர்.
அப்போது வீட்டிற்குள் மின்விளக்குகள் எரிந்தன. இதனால் வீட்டில் யாரோ இருப்பதாக தொழில்அதிபர் உணர்ந்தார். பின்னர் அவர் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் பார்த்தார். அப்போது தொழில் அதிபர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியில் உறைய வைத்தது. அதாவது வீட்டிற்குள் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தொழில் அதிபர், இந்திராநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
தற்கொலை
அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் தூக்கில் தொங்கியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் தூக்கில் தொங்கிய நபரின் பெயர் திலீப்குமார் (வயது 46) என்பதும், அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பெங்களூருவில் வசித்து வந்த திலீப்குமார் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும், இந்திராநகர் போலீஸ் நிலையத்தில் அவர் மீது 2 திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
மேலும் தொழில் அதிபர் வீட்டில் திருட வந்த திலீப்குமார் அங்கேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.