நாரை உயிரை காப்பாற்றி ஓராண்டாக வளர்த்துவந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு
ஒராண்டுக்கு மேல் நாரையை இளைஞர் வளர்த்துவந்த நிலையில் அதை அவரிடமிருந்து மீட்ட வனத்துறையினர் சரணாலயத்திற்கு கொண்டு சென்றனர்.
லக்னோ,
உத்தரபிரதேசம் அமேதி மாவட்டம் மண்ட்ஹா கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஆரிப் கான் குர்ஜர். இவர் கடந்த ஆண்டு தனது தோட்டத்திற்கு சென்றபோது அங்கு காலில் காயத்துடன் நாரை ஒன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தது. அந்த நாரையை மீட்ட ஆரிப் கான் தனது வீட்டிற்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தார்.
அதன் பின்னர், அந்த நாரை ஆரிப் வீட்டிலேயே இருந்துவிட்டது. ஆரிப் வீட்டை விட்டு வெளியே செல்லும்போதும் அவர் பின்னாலேயே நாரை பறந்து வந்தது. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. உயிரை காப்பாற்றிய ஆரிப் உடனேயே இருந்த நாரை அவர் தோட்டத்திற்கு சென்றாலும் அவர் உடன் வந்தது. மேலும், அந்த நாரை ஆரிப்பின் குடும்ப உறுப்பினராகவே மாறிவிட்டது.
இது தொடர்பான செய்திகள் கடந்த சில நாட்களுக்கு முன் வைரலானது. ஆரிப் குடும்பத்துடன் நட்பாக பழகிவந்த நாரையை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கடந்த சில நாட்களுக்கு முன் சந்தித்தார்.
இந்நிலையில், ஆரிப் இடமிருந்த நாரையை கடந்த 21-ம் தேதி உத்தரபிரதேச வனத்துறையினர் எடுத்து சென்றனர். நாரை இயற்கையான சூழ்நிலையில் வாழவேண்டும் என்று கூறிய வனத்துறையினர் சமஸ்புர் சரணாலயத்தில் நாரையை இயற்கையான சூழ்நிலையில் வாழ ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாரையை வனத்துறையினர் எடுத்து சென்ற நிலையில் ஆரிப் மீது வனத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆரிப் மீது வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் நாரையை வீட்டில் வளர்த்தது தொடர்பாக வரும் 4-ம் தேதி கவுரிகஞ்ச் வனத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படியும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.