2022-23 ஆம் நிதி ஆண்டிற்காக ரூ.65,571.49 கோடி பட்ஜெட்டை தாக்கல் செய்தது உத்தரகாண்ட் அரசு
உத்தரகாண்ட் அரசு, 2022-23 ஆம் நிதி ஆண்டிற்காக ரூ.65,571.49 கோடி பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் 2022-23ம் ஆண்டுக்கான ரூ. 65,571.49 கோடி பட்ஜெட்டை மாநில அரசு இன்று தாக்கல் செய்தது. தமிழக பட்ஜெட்
இந்த பட்ஜெட்டில் முதியோருக்கான ஓய்வூதியம், விதவைகள், கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள், பொருளாதாரத்தில் நலிவடைந்த விவசாயிகள், பாலின விகிதத்தை மேம்படுத்துதல் மற்றும் அனைவருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் தொகை வழங்குதல் போன்றவற்றுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டேராடூனில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்க நாளில் பட்ஜெட்டை நிதி மந்திரி பிரேம் சந்த் அகர்வால் தாக்கல் செய்தார். இதில் மாநில அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் படிகளுக்காக ரூ.17,350.21 கோடியும், ஓய்வூதியத்திற்காக ரூ.6,703.10 கோடியும், வட்டி செலுத்த ரூ. 6,017.85 கோடியும் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், முதியோர், விதவைகள், கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க பட்ஜெட்டில் அதிகபட்சமாக ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாலின விகிதத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நந்த கௌரா யோஜனாவுக்கு பட்ஜெட்டில் ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒரு மகளின் பெற்றோருக்கு, அவள் பிறந்த ஆண்டில் தொடங்கி, அவள் திருமணம் ஆகும் வரை ஏழு தவணைகளில் ரூ. 51,000 வழங்க நடவடிகை எடுக்கப்படுகிறது.
மேலும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவுக்கு ரூ. 311.76 கோடியும் (கிராமப்புறம்), ரூ. 205 கோடி ஸ்மார்ட் சிட்டி யோஜனாவுக்கும், எல்லையோர பகுதிகளை மேம்படுத்த ரூ.20 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நலிந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தரமான கல்வியை மலிவு விலையில் வழங்குவதற்காக அடல் உட்கிரிஷ்ட் வித்யாலயாக்கள் அமைக்க ரூ. 12.28 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.