கர்நாடக அரசு பள்ளி கட்டிடங்களில் காவி வர்ணம் பூசும் 'விவேகா' திட்டம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்


கர்நாடக அரசு பள்ளி கட்டிடங்களில் காவி வர்ணம் பூசும் விவேகா திட்டம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 14 Nov 2022 6:45 PM GMT (Updated: 14 Nov 2022 6:45 PM GMT)

கர்நாடகத்தில் அரசு பள்ளி கட்டிடங்களில் காவி வர்ணம் பூசும் ‘விவேகா’ திட்டத்தை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்.

பெங்களூரு:

பள்ளி கட்டிடங்கள்

கர்நாடகத்தில் அரசு பள்ளி கட்டிடங்களில் காவி வர்ணம் பூசும் 'விவேகா' திட்டத்தின் தொடக்க விழா நேற்று கலபுரகியில் நடந்தது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு, ஒரு பள்ளியில் கல்வெட்டை திறந்து இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

கர்நாடகத்தில் கல்யாண கர்நாடக பகுதியில் ஒரு தொகுதிக்கு 50 பள்ளி கட்டிடங்கள் வீதம் 2,000 பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படும். நடப்பு ஆண்டிலேயே இந்த கட்டிட பணிகள் முடிக்கப்படும். ஒரே ஆண்டில் மாநிலம் முழுவதும் 7,600 பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு எந்த ஒரு ஆட்சியிலும் இந்த அளவுக்கு ஒரே நேரத்தில் இவ்வளவு கட்டிடங்களை கட்டியது இல்லை.

உள்கட்டமைப்பு வசதிகள்

இந்த திட்டம் மூலம் அரசு பள்ளிகளில் பெரிய அளவுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. அடுத்து வரும் 2, 3 ஆண்டுகளில் இதே எண்ணிக்கையில் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படும். இதன் மூலம் அரசு பள்ளிகளில் வகுப்பறை கட்டிடங்கள் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். தொலைநோக்கு பார்வையுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தை எந்த ஆட்சி வந்தாலும் நிறுத்த முடியாது. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதா ஆட்சியே மீண்டும் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.

நடப்பு ஆண்டில் புதிதாக 4 ஆயிரம் அங்கன்வாடி மையங்களை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்களுக்கு தலா ரூ.15 லட்சம் நிதி அளிக்கப்படுகிறது. இவற்றில் 1,500 அங்கன்வாடி மையங்கள் கல்யாண கர்நாடக பகுதியில் தொடங்கப்படுகிறது. இதில் அரசின் சாதனை என்று சொல்வதை விட குழந்தைகளின் எதிர்காலம் அடங்கியுள்ளது.

ரூ.30 ஆயிரம் கோடி

திறமையான குழந்தைகளை உருவாக்க வேண்டியது அரசின் கடமை. அதை எங்கள் அரசு செய்து கொண்டிருக்கிறது. ஒரு நாடு செழிப்பாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு கல்வி மிக முக்கியம். பெண் குழந்தைகளின் மேம்பாட்டிற்காக ரூ.30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரம், பெண்களின் மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளோம்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அனைவருக்கும் கல்வி திட்டம் தொடங்கப்பட்டது. 10 ஆண்டுகள் திட்டம் கடந்த 2012-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. கர்நாடகத்தில் முன்பு ஆட்சி செய்த கட்சிகள், புதிதாக பள்ளி கட்டிடங்களை கட்ட நடவடிக்கை எடுக்கவே இல்லை. பள்ளி கட்டிடங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடி மையங்கள்

கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு கழிவறைகள் கட்டி கொடுக்கப்படும் வருகிற ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் இந்த பணிகளை நாங்கள் செய்து முடிப்போம். குழந்தைகளின் கல்வியில் அங்கன்வாடி மையங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. வெறும் பேச்சில் கல்வி, வேலை, தன்னிறைவு போன்றவற்றை நாம் அடைய முடியாது.

சிறப்பு திட்டங்களை வகுத்து இலக்கை நிர்ணயித்து செயலாற்ற வேண்டும். நான் நான் பட்ஜெட்டில் அறிவித்த அனைத்து திட்ட பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. கர்நாடக வரலாற்றில் இது ஒரு சாதனை. புதிதாக 32 ஆயிரம் கவுரவ விரிவரையாளர்களை நியமிக்க இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே அனுமதி அளித்தோம். அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தையும் அதிகரித்துள்ளோம்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள்

அரசு பள்ளிகளில் 15 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருகிற கல்வி ஆண்டில் பள்ளி பாடத்திட்டத்தில் யோகாவை சேர்க்க முடிவு செய்துள்ளோம். 100 புதிய உயர்நிலை பள்ளிகள் மற்றும் 100 பி.யூ.கல்லூரிகளை தொடங்க அனுமதி அளித்துள்ளோம். சுகாதாரத்துறையில் 67 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படுகின்றன.

கல்யாண கர்நாடக மேம்பாட்டு வாரியத்திற்கு ரூ.3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் கேள்வி கேட்கும் மனநிலை குழந்தைகளுக்கு வர வேண்டும். கன்னட குழந்தைகள் உலகில் கன்னடத்தின் கொடியை நாட்ட வேண்டும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

இந்த விழாவில் பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ், தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story