பெங்களூருவில் திருட்டு வழக்குகளில் 2 பேர் கைது: ரூ.78¾ லட்சம் செல்போன்கள் பறிமுதல்


பெங்களூருவில் திருட்டு வழக்குகளில் 2 பேர் கைது:  ரூ.78¾ லட்சம் செல்போன்கள் பறிமுதல்
x

பெங்களூருவில் திருட்டு வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.78¾ லட்சம் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

பெங்களூரு:

போலீஸ் கமிஷனர் பேட்டி

பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி நேற்று தனது அலுவலகத்தில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூரு நகரில் இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்பவர்களை மிரட்டி ஒரு கும்பல் செல்போன்களை பறித்து வந்தது. மேலும் செல்போன் கடைகளின் கதவை உடைத்தும் மர்மநபர்கள் செல்போன்களை திருடி இருந்தனர். இதுதொடர்பாக அசோக்நகர், வர்த்தூர், சாம்ராஜ்பேட்டை, சிவாஜிநகர் உள்பட சில போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி இருந்தது.

இந்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின்பேரில் செல்போன்களை திருடி சென்ற 2 பேரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பாதராயனபுராவை சேர்ந்த அப்சல் பாஷா, சிவாஜிநகரை சேர்ந்த இஷாஸ் என்பது தெரியவந்தது.

ரூ.78.84 லட்சம் செல்போன்கள்

இவர்கள் தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து தனியாக நடந்து செல்பவர்களிடம் ஆயுதங்களை காட்டி மிரட்டி செல்போன் பறித்து வந்து உள்ளனர். மேலும் செல்போன் கடைகளின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்த விலை உயர்ந்த செல்போன்களை திருடி சென்று இருந்தனர். திருடப்பட்ட செல்போன்களை மும்பை, டெல்லி, ஐதராபாத்தில் விற்பனை செய்து வந்துஉள்ளனர்.

கைதானவர்கள் கொடுத்த தகவலின்பேரில் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 512 செல்போன்கள் மீட்கப்பட்டது. அதன்மதிப்பு ரூ.78 லட்சத்து 84 ஆயிரம் ஆகும். கைது செய்யப்பட்டவர்களின் கூட்டாளிகளும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story