பெங்களூரு லால்பாக்கில் மாம்பழம்-பலாப்பழ கண்காட்சி; பசவராஜ் பொம்மை நாளை தொடங்கி வைக்கிறார்


பெங்களூரு லால்பாக்கில் மாம்பழம்-பலாப்பழ கண்காட்சி; பசவராஜ் பொம்மை நாளை தொடங்கி வைக்கிறார்
x

பெங்களூரு லால்பாக்கில் மாம்பழம்-பலாப்பழ கண்காட்சியை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

பெங்களூரு:

கர்நாடக மாம்பழ வளர்ச்சி வாரிய தலைவர் நாகராஜ் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மாம்பழம்-பலாப்பழம்

கர்நாடகத்தில் சுமார் 3½ லட்சம் ஏக்கர் பரப்பளவில் மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பு ஆண்டில் 14 லட்சம் டன் மாம்பழங்கள் அறுவடை ஆகும் என்று எதிர்பார்க்கிறோம். மாம்பழ சாகுபடி தாமதமாகியுள்ளது. அத்துடன் கோடை மழையால் மாம்பழ உற்பத்தியும் குறைந்துள்ளது. ஆண்டுதோறும் மாம்பழம்-பலாப்பழ கண்காட்சி மற்றும் விற்பனை லால்பாக்கில் நடத்தப்படுகிறது.

அதே போல் இந்த ஆண்டும் மாம்பழம்-பலாப்பழ கண்காட்சி மற்றும் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாம்பழ-பலாப்பழ கண்காட்சி தொடக்க விழா நாளை லால்பாக்கில் நடக்கிறது. இந்த கண்காட்சியை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைக்கிறார். இந்த கண்காட்சி வருகிற 13-ந் தேதி வரை நடக்கிறது. இந்த கண்காட்சியை அரசின் தோட்டக்கலை மற்றும் மாம்பழ வளர்ச்சி வாரியம் இணைந்து நடத்துகிறது.

நியாயமான விலை

நுகர்வோருக்கு தரமான மாம்பழங்கள் கிடைக்க வேண்டும், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்பது தான் இந்த கண்காட்சியின் நோக்கம் ஆகும். இந்த கண்காட்சியில் பலாப்பழமும் இடம் பெறுகிறது. சுமார் 40 வகையான மாம்பழங்கள் மற்றும் 12 வகையான பலாப்பழங்கள் கண்காட்சியில் வைக்கப்பட உள்ளன.

இங்கு 130 கடைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. தினமும் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகள் திறந்திருக்கும். செயற்கை முறையில் அதாவது ரசாயனம் மூலம் பழங்களை பழுக்க வைக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு இயற்கை முறையில் பழுத்த பழங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நாகராஜ் கூறினார்.


Next Story