கர்நாடக மேல்-சபையில் காலியான ஒரு பதவிக்கு இடைத்தேர்தல்: பா.ஜனதா வேட்பாளர் பாபுராவ் சின்சனச்சூர்


கர்நாடக மேல்-சபையில் காலியான ஒரு பதவிக்கு இடைத்தேர்தல்:  பா.ஜனதா வேட்பாளர் பாபுராவ் சின்சனச்சூர்
x

கர்நாடக மேல்-சபையில் காலியான ஒரு பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்த இடத்திற்கு பா.ஜனதா சார்பில் பாபுராவ் சின்சனச்சூர் நிறுத்தப்பட்டுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக மேல்-சபை உறுப்பினராக சி.எம்.இப்ராஹிம் இருந்தார். அவர், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இணைந்தார். இதையடுத்து, தனது மேல்-சபை உறுப்பினர் பதவியை சி.எம்.இப்ராஹிம் ராஜினாமா செய்திருந்தார். இதன் காரணமாக காலியாக உள்ள மேல்-சபை உறுப்பினர் பதவிக்கு வருகிற 11-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பலத்தின் அடிப்படையில் மேல்-சபையில் காலியான ஒரு உறுப்பினர் பதவியில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் வேட்பாளர்களை நிறுத்த வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளராக யாதகிரியை சேர்ந்த பாபுராவ் சின்சனச்சூர் நிறுத்தப்பட்டுள்ளார். இதனை பா.ஜனதா மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேல்-சபை உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று (திங்கட்கிழமை) கடைசி நாளாகும். இதனால் இன்று பாபுராவ் சின்சனச்சூர் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். அவர் போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது.


Next Story