ரெயில் மோதி கல்லூரி மாணவி உடல் சிதறி சாவு: டயருக்கு தீவைத்து மாணவர்கள் போராட்டம்-பரபரப்பு


ரெயில் மோதி கல்லூரி மாணவி உடல் சிதறி சாவு:  டயருக்கு தீவைத்து மாணவர்கள் போராட்டம்-பரபரப்பு
x

தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது ரெயில் மோதி கல்லூரி மாணவி உடல் சிதறி பலியானார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் டயருக்கு தீவைத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஹாசன்:

ரெயில் மோதி மாணவி சாவு

ஹாசன் அருகே மொசலே ஒசஹள்ளியை அடுத்த குட்டததீரண்ணா கிராமத்தை சேர்ந்தவர் பிரீத்தி (வயது 18). இவர் மொசலே ஒசஹள்ளி பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் இறுதியாண்டு பி.காம் படித்து வந்தார். பிரீத்தி நேற்று காலை வழக்கம் போல கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் அந்தப்பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கால் தவறி தண்டவாளத்தில் விழுந்தார்.

அந்த சமயத்தில் மைசூருவில் இருந்து ஹாசன் நோக்கி சென்ற ரெயில் அவர் மீது மோதியது. இதில் பிரீத்தி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மாணவர்கள் போராட்டம்

அந்தப்பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், இதுவரை அந்தப்பகுதியில் மேம்பாலம் எதுவும் அமைக்கப்படவில்லை. இந்த நிலையில், பிரீத்தியுடன் படிக்கும் மாணவ-மாணவிகள் மற்றும் மக்கள் என நூற்றுக்கணக்கானோர் அந்தப்பகுதியில் உள்ள சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். மேலும் சாலையின் குறுக்கே டயர்களை போட்டு தீ கொளுத்தினர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இதையடுத்து போராட்டக்காரர்கள் கூறுகையில், அந்தப்பகுதியில் தண்டவாளத்தை கடந்து செல்ல மேம்பாலம் அமைக்க நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தற்போது ஒரு உயிர் பலி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப்பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றனர்.

இதையடுத்து ரெயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அந்தப்பகுதியில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story