கவர்னர் மாளிகையை முற்றுகையிட பேரணியாக சென்ற காங்கிரஸ் தலைவர்கள் கைது


கவர்னர் மாளிகையை முற்றுகையிட பேரணியாக சென்ற காங்கிரஸ் தலைவர்கள் கைது
x

ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்து பெங்களூருவில் உள்ள கவர்னர் மாளிகையை முற்றுகையிட பேரணியாக சென்ற காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு:

அமலாக்கத்துறைக்கு எதிராக போராட்டம்

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக தலைநகர் டெல்லியில் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது. இந்த நிலையில் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் சார்பில் பெங்களூருவில் உள்ள கவர்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்து இருந்தது.

அதன்படி காலை பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் யு.டி.காதர், காங்கிரஸ் செயல் தலைவர்கள் ஈஸ்வர் கண்ட்ரே, சலீம் அகமது, மகளிர் காங்கிரஸ் தலைவி புஷ்பா அமர்நாத், இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது நலபட் உள்ளிட்ட தலைவர்கள், தொண்டர்கள் ஒன்று கூடி மத்திய அரசு, அமலாக்கத்துறைக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

சித்தராமையா,டி.கே.சிவக்குமார் கைது

இதன்பின்னர் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி கவர்னர் மாளிகையை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டு சென்றனர். அவர்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் சர்க்கிள் பகுதியில் தடுப்பு கம்பிகளை வைத்து போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார், போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். மேலும் போலீசாருடன் தள்ளுமுள்ளுவிலும் ஈடுபட்டனர். மேலும் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட தலைவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களை போலீசார் கைது செய்து குண்டுக்கட்டாக தூக்கி சென்று அங்கு நிறுத்தப்பட்டு இருந்த பஸ்களில் ஏற்றி அழைத்து சென்றனர்.

போலீஸ் பாதுகாப்பு

முன்னதாக அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா, கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் பீமாசங்கர் குலேத் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

காங்கிரசார் நடத்திய பேரணியால் குயின்ஸ் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள சில சாலைகள் மூடப்பட்டன. இதனால் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.


Next Story