விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தக்காளி இறக்குமதியை தடுக்க வேண்டும்


விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தக்காளி இறக்குமதியை தடுக்க வேண்டும்
x

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தக்காளி இறக்குமதியை தடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் விவசாய சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோலார் தங்கவயல்:

இறக்குமதிக்கு தடை

கோலார் மாவட்ட கலெக்டர் வெங்கடராஜா தலைமையில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர். அப்போது விவசாய சங்கத்தின் மாவட்ட செயல் தலைவர் ஹனுமய்யா பேசுகையில் கூறியதாவது:-

கோலார் மாவட்டத்தில் தக்காளி தான் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. ஆனால், கோலாரில் தக்காளியை வியாபாரம் செய்ய தகுந்த மார்க்கெட் வசதி இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணங்களால் தக்காளி விற்பனை மந்தமடைந்தது.

இதனால் தக்காளி விலை கணிசமாக குறைந்தது. இதனால் தக்காளி பயிரிட்டு இருந்த விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். மேலும், அவர்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோலாார் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் சிலர் வெளி மாநிலங்களில் இருந்து தக்காளியை இறக்குமதி செய்து விற்பனை செய்கின்றனர். இதனால் உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் தக்காளி இறக்குமதியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மார்க்கெட் வளர்ச்சியில்...

இந்த கூட்டத்தின்போது விவசாயிகள் மாநில துணை தலைவர் நாராயண கவுடா பேசியதாவது:-

ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டிற்கு ஆண்டு தோறும் கோடிக்கணக்கான வருவாய் கிடைக்கிறது. ஏ.பி.எம்.சி. அதிகாரிகள் தேவையில்லாத பணிகளுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்கின்றனர். ஆனால், மார்க்கெட் வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை. அவர்களுக்கு விவசாயிகளின் பிரச்சினைகள் புரிவதில்லை. கோலார் ஏ.பி.எம்.சி. மார்க்கெட் ஆசியாவிலேயே 2-வது பெரிய வேளாண் மார்க்கெட் என்ற பெயர் பெற்றது.

ஒரு வாரத்திற்குள் மார்க்கெட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும். இல்லையென்றால், தேசிய நெடுஞ்சாலையில் தக்காளியை கொட்டி மறியலில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story