76 பயனாளிகளுக்கு இலவச வீடுகள்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வழங்கினார்


76 பயனாளிகளுக்கு இலவச வீடுகள்;   முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வழங்கினார்
x

பெங்களூரு தர்மராய சாமி கோவில் வார்டில் 76 பயனாளிகளுக்கு இலவச வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அவற்றை வழங்கினார்.

பெங்களூரு:

ரூ.9½ கோடி செலவில்

பெங்களூரு சிக்பேட்டை தொகுதி தர்மராய சாமி கோவில் வார்டில் வீடு இல்லாமல் சாலையோரம் வசித்து வரும் மக்களுக்கு மாநகராட்சி சார்பில் ரூ.9½ கோடி செலவில் 76 புதிய வீடுகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. புதிய வீடுகள் எம்.எஸ்.பில்டிங்கில் கட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜனதா எம்.பி. தேஜஸ்வி சூர்யா, சிக்பேட்டை தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. உதய் கருடாச்சார், பசவனகுடி எம்.எல்.ஏ. ரவி சுப்பிரமணியா, மாநகராட்சி கமிஷனர் துஷார் கிரிநாத், தர்மராய சாமி கோவில் வார்டு முன்னாள் கவுன்சிலர்கள் தன்ராஜ், பிரதீபா தன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திறந்து வைத்தார்

புதிய வீடுகளை ரிப்பன் வெட்டி பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார். பின்னர் புதிய வீடுகளை அவர் பார்வையிட்டார். இதன்பின்னர் அங்கு வைக்கப்பட்டு இருந்த கல்வெட்டை பார்வையிட்ட பசவராஜ் பொம்மை பின்னர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

கே.ஆர்.மார்க்கெட்டுக்கும் எனக்கும் பழைய பந்தம் உள்ளது. 25 முதல் 30 வருடமாக இங்கு வந்து உள்ளேன். சிக்பேட்டை தொகுதியில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் வீடுகளை திறந்து வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பெங்களூருவில் ராஜகால்வாய்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ராஜகால்வாய் தண்ணீரை சுத்திகரித்து பூங்காக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படும்.

கே.ஆர்.மார்க்கெட் பகுதியில் பயனாளிகளுக்கு இப்படி வீடு கட்டி கொடுப்பது சாத்தியம் அல்ல. ஆனாலும் மாநகராட்சி அதிகாரிகள் கட்டி கொடுத்து உள்ளனர். பெங்களூருவில் நிலவும் போக்குவரத்து பிரச்சினையை தீர்க்க ரூ.15 ஆயிரம் கோடி செலவில் புறநகர் ரெயில் திட்ட பணிகள் தொடங்க உள்ளது. இந்த பணிகளை வருகிற 20-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

ரூ.15 ஆயிரம் கோடி செலவில் வெளிவட்ட சாலை பணிகளுக்கும் டெண்டர் விரைவில் அழைக்கப்படும். இந்த பணிகள் முடிந்தால் பெங்களூரு நகரில் போக்குவரத்து பிரச்சினை சரிசெய்ய முடியும். பெங்களூரு நகர வளர்ச்சிக்கு ரூ.8 ஆயிரம் கோடி கொடுத்து உள்ளேன். பொதுமக்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் வீடுகள் கட்டும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தோம். ஆனால் கொரோனா காரணமாக அந்த திட்டம் தள்ளிபோனது. பொதுமக்கள் தங்கள் இடத்தில் வீடுகள் கட்டி கொள்ள மாநகராட்சியிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னாள் கவுன்சிலர்கள் ஏற்பாடு

இதன் பின்னர் 5 பயனாளிகளுக்கு வீட்டின் சாவிகளை பசவராஜ் பொம்மை வழங்கினார். இதையடுத்து பசவராஜ் பொம்மைக்கு சால்வை, மைசூரு தலைப்பாகை அணிவித்து முன்னாள் கவுன்சிலர் தன்ராஜ் கவுரவித்தார். இதனை தொடர்ந்து அறுசுவை உணவும் பரிமாற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் கவுன்சிலர்கள் தன்ராஜ், பிரதீபா தன்ராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்.


Next Story