மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் ஆலோசனை


மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் ஆலோசனை
x

மாநிலங்களவை தேர்தலில் 3-வது வேட்பாளரை வெற்றி பெற செய்வது குறித்து கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார்.

பெங்களூரு:

45 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு

டெல்லியில் உள்ள மாநிலங்களவையில் காலியாகும் 57 இடங்களுக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. கர்நாடகத்தில் இருந்து 4 இடங்களுக்கு மாநிலங்களவை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ், லெகர்சிங் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ், மன்சூர் அலிகான் ஆகியோரும், ஜனதா தளம் (எஸ்) சார்பில் குபேந்திரரெட்டியும் களத்தில் உள்ளனர். ஒரு வேட்பாளர் வெற்றி பெற 45 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை.

கர்நாடக சட்டசபையில் கட்சிகளுக்கு உள்ள பலத்தின் அடிப்படையில் பா.ஜனதா 2 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. 4-வது இடத்திற்கு 3 கட்சிகளும் போட்டியிட்டுள்ளன. அதாவது மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. 4-வது இடத்தை கைப்பற்ற பா.ஜனதா தீவிரமாக களம் இறங்கியுள்ளது. இதற்காக கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் பெங்களூரு வந்துள்ளார்.

அருண்சிங் உத்தரவு

இங்கு பா.ஜனதா நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். ஜனதா தளம் (எஸ்) கட்சியில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற அக்கட்சி முயற்சி செய்து வருகிறது. அந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக்கிற்கு, அருண்சிங் உத்தரவிட்டுள்ளார். ஜனதா தளம் (எஸ்) கட்சியில் 4 முதல் 5 எம்.எல்.ஏ.க்கள் வரை அதிருப்தியில் உள்ளனர். அவர்களை நேரடியாக சந்தித்து பேச மந்திரி ஆர்.அசோக் திட்டமிட்டுள்ளார்.

மாநிலங்களவை தேர்தலை பொறுத்தவரையில் கர்நாடகத்தில் ஒரு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தனது எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் பிற கட்சிகளுக்கு செல்லாமல் தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. பா.ஜனதாவின் 3-வது வேட்பாளருக்கே வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) ஆகியவை மதசார்பற்ற கட்சிகள். கொள்கை ஒன்றாக இருந்தாலும் அக்கட்சிகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வதால், அது பா.ஜனதாவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story