வருகிற 21-ந் தேதி நடக்கும் மைசூரு யோகா தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு


வருகிற 21-ந் தேதி நடக்கும் மைசூரு யோகா தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு
x

மைசூருவில் வருகிற 21-ந்தேதி நடைபெறும் யோகா தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் குறித்து அவர் நேற்று முதல்-மந்திரியுடன் ஆலோசனை நடத்தினார்.

பெங்களூரு:

பிரதமர் மோடி பங்கேற்பு

நாடு முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி மைசூருவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் யோகா தின விழா கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது.

அதுபோல் இந்த ஆண்டுக்கான சர்வதேச யோகா தினம் வருகிற 21-ந்தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. மைசூருவில் நடைபெறும் யோகா தின விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகள் மைசூரு லலிதா மகால் ரேஸ்கோர்ஸ் ரோட்டில் விரிவாக செய்யப்பட்டு வருகின்றன.

ஆலோசனை

இந்த நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடியுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை காணொலி மூலம் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் மோடி காணொலிகாட்சி வாயிலாக கலந்து கொண்டார்.

அப்போது வருகிற 21-ந் தேதி மைசூருவில் நடைபெறும் யோகா தின விழாவுக்காக கர்நாடக அரசு மேற்கொண்டுள்ள ஏற்பாடுகள் குறித்து பசவராஜ் பொம்மை விளக்கி கூறினார். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள், பங்கேற்பவர்கள் விவரங்களையும் பிரதமர் கேட்டறிந்தார்.

போலீஸ் டி.ஜி.பி.

இதில் கர்நாடக அரசின் தலைமை செயலாளர் ரவிக்குமார், மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன்சூட், முதல்-மந்திரியின் முதன்மை செயலாளர் மஞ்சுநாத் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story