ரோகித் சக்ரதீர்த்த குழுவினர் சிபாரிசு செய்த பாடங்களை அரசு ரத்து செய்ய வேண்டும்-சித்தராமையா பேட்டி


ரோகித் சக்ரதீர்த்த குழுவினர் சிபாரிசு செய்த பாடங்களை அரசு ரத்து செய்ய வேண்டும்-சித்தராமையா பேட்டி
x

ரோகித் சக்ரதீர்த்த குழுவினர் சிபாரிசு செய்த பாடங்களை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

ரத்து செய்ய வேண்டும்

கர்நாடக பாடநூல் குழுவின் தலைவராக இருந்த ரோகித் சக்ரதீர்த்த, தேசியகவி குவெம்புக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு இருந்ததால், அவருக்கு எதிராக போராட்டம் நடந்தது. இதனால் சுதாரித்து கொண்ட முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, ரோகித் சக்ரதீர்த்த தலைமையிலான பாடநூல் குழுவை கலைத்து உத்தரவிட்டுள்ளார்.

தற்போது நிலவும் சூழ்நிலைக்கு தீர்வு காண வேண்டும் என்றால், ரோகித் சக்ரதீர்த்த தலைமையிலான பாடநூல் குழு சிபாரிசு செய்திருந்த பாடங்களை அரசு ரத்து செய்ய வேண்டும். அதற்கு பதிலாக ஏற்கனவே இருந்த பாடங்களை இந்த கல்வி ஆண்டு தொடருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாடங்களை நீக்கி இருந்தால்...

பாடநூல் குழுவை அரசு கலைத்திருப்பதற்கு பதிலாக, தற்போது இருக்கும் பாடங்களை நீக்கி இருந்தால் சரியாக இருந்திருக்கும். ஏனெனில் பாடநூல் குழுவையே அரசு கலைத்திருக்கும் போது, அவர்கள் சிபாரிசு செய்த பாடங்களை ஏன் மாணவர்கள் படிக்க வேண்டும். அந்த குழு கலைக்கப்பட்ட பின்பு, அவர்கள் சிபாரிசு செய்த பாடங்கள் மட்டும் ஏன் இருக்க வேண்டும். அதனை ஒப்புக் கொள்ள சாத்தியமில்லை.

பசவண்ணவர் சம்பந்தப்பட்ட பாடங்களில் திருத்தம் செய்யப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்திருக்கிறார். அப்படியென்றால் தற்போது இருக்கும் பசவண்ணர் பற்றிய கருத்துகள் உடனடியாக நீக்கப்படுமா? என்பதை பசவராஜ் பொம்மை தெளிவுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா கூறியுள்ளார்.


Next Story