எனக்கும்-டி.கே.சிவக்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு இல்லை: பிறந்த நாள் பவளவிழாவில் சித்தராமையா பேச்சு


எனக்கும்-டி.கே.சிவக்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு இல்லை:  பிறந்த நாள் பவளவிழாவில் சித்தராமையா பேச்சு
x

காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடியால் அழிக்க முடியாது என்று சித்தராமையா கூறினார்.

பெங்களூரு:

கருத்து வேறுபாடு

முன்னாள் முதல்-மந்திரியும், கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவுக்கு நேற்று 75-வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி அவரது பிறந்த நாள் பவள விழா தாவணகெரேயில் பிரமாண்டமான முறையில் நேற்று நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் மந்திரிகள் ஆர்.வி.தேஷ்பாண்டே, தினேஷ்குண்டுராவ் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் சித்தராமையா ஏற்புரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:-

நான் எனது பிறந்த நாளை கொண்டாடுவது இல்லை. ஆனால் எனது ஆதரவாளர்கள், நலம் விரும்பிகள் விரும்பி இந்த பிறந்த நாள் விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். எனக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக பா.ஜனதாவினர் தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். ஆனால் எங்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம்.

ஆசைப்படவில்லை

தன்னை தேடி வந்த பிரதமர் பதவியை சோனியா காந்தி தியாகம் செய்தார். ராகுல் காந்தி நினைத்திருந்தால் பிரதமராகி இருக்க முடியும். ஆனால் அவர் அந்த பதவி மீது ஆசைப்படவில்லை. ஆனால் பொய் வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு மத்திய அரசு அமலாக்கத்துறை மூலம் தொல்லை தருகிறது.

காங்கிரஸ் கட்சியை அழிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி முயற்சி செய்து வருகிறார். ஆனால் அவரால் காங்கிரசை அழிக்க முடியாது. அரசியல் சாசனத்தை மாற்ற மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது. ஊழல் அதிகரித்துவிட்டது.

வாபஸ் பெறவில்லை

மோடி பிரதமரான பிறகு நாட்டின் கடன் சுமை ரூ.150 லட்சம் கோடியாக அதிகரித்துவிட்டது. விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் அந்த சட்டங்களை மத்திய அரசு வேறு வழியில்லாமல் வாபஸ் பெற்றது. ஆனால் கர்நாடகத்தில் அத்தகைய சட்டங்களை இந்த அரசு இன்னும் வாபஸ் பெறவில்லை.

கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசு எதையும் செய்யவில்லை. கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு ஊழலில் திளைத்து வருகிறது. 40 சதவீத கமிஷன் கொடுத்தால் மட்டுமே ஒப்பந்ததாரர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. 40 சதவீத கமிஷனால் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீல் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் மந்திரி பதவியை ஈசுவரப்பா ராஜினாமா செய்தார்.

நல்லாட்சி நிர்வாகம்

இந்த பா.ஜனதா அரசை தூக்கி எறிய மக்கள் முடிவு செய்துவிட்டனர். கர்நாடகத்தில் ராகுல் காந்தி தலைமையில் சட்டசபை தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறுவோம். அதன் பிறகு அமையும் காங்கிரஸ் நல்லாட்சி நிர்வாகத்தை வழங்கும். தட்சிண கன்னடாவில் இந்து, முஸ்லிம் இளைஞர்கள் கொலை செய்யப்பட்டனர். ஆனால் கொலையான இந்து பிரமுகரின் வீட்டிற்கு மட்டும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சென்றுவிட்டு நிவாரணம் வழங்கினார். முஸ்லிம் இளைஞர்களின் வீடுகளுக்கு செல்லவில்லை. அவர் இந்துக்களுக்கு மட்டும் முதல்-மந்திரியா?. முதல்-மந்திரி பதவியில் நீடிக்கும் தகுதியை பசவராஜ் பொம்மை இழந்துவிட்டார்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

இதில் கர்நாடகம் முழுவதும் இருந்து சுமார் 5 லட்சம் பேர் கலந்துகொண்டனர்.


Next Story