கர்நாடகத்தில் முதல் முறையாக கப்பன் பூங்காவில் சுரங்கப்பாதை மீன் அருங்காட்சியகம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அடிக்கல் நாட்டுகிறார்


கர்நாடகத்தில் முதல் முறையாக கப்பன் பூங்காவில் சுரங்கப்பாதை மீன் அருங்காட்சியகம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை  அடிக்கல் நாட்டுகிறார்
x

கர்நாடகத்தில் முதல் முறையாக கப்பன் பூங்காவில் சுரங்கப்பாதை மீன் அருங்காட்சியகம் அமைய உள்ளது. இதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திங்கட்கிழமை அடிக்கல் நாட்டுகிறார்.

பெங்களூரு:

சுரங்கப்பாதை மீன் அருங்காட்சியகம்

கர்நாடக மாநிலத்தில் உயிரியல் பூங்கா, அருங்காட்சியகம் போன்றவை உள்ளன. அந்த வரிசையில் முதல் முறையாக சுரங்கப்பாதை மீன் அருங்காட்சியகம் அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. பெங்களூருவில் உள்ள கப்பன் பூங்காவில் 1983-ம் ஆண்டில் கட்டப்பட்ட பழமையான மீன் அருங்காட்சியகம் உள்ளது. அதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வருவாய் வருகிறது. தற்போது அந்த அருங்காட்சியகத்தை மேம்படுத்தவும், பல்வகை கடல்சார் உயிரினங்களை காட்சிபடுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தில் முதல் முறையாக கப்பன் பூங்காவில் உள்ள சுரங்கப்பாதை அமைப்பை கொண்ட மீன் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் தொடங்க உள்ளது.

பசவராஜ் பொம்மை தொடங்கி வைக்கிறார்

மீ்ன் அருங்காட்சியகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள 17 ஆயிரம் சதுர அடியில், முதல்கட்டமாக 2 ஆயிரம் சதுரஅடியை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பணிகளை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திங்கட்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட தனியார் நிறுவனம் மற்றும் அரசின் மீன்வளத்துறை பங்களிப்புடன் இந்த சுரங்கப்பாதை மீன் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து நம்ம பெங்களூரு அக்வா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நந்தகுமார் பேசுகையில், கப்பன் பூங்காவில் சுரங்கப்பாதை மீன் அருங்காட்சியகம் அமைய உள்ளது. இந்த அருங்காட்சியகம் 30-க்கும் மேற்பட்ட கடல்சார் உயிரினங்களுக்கு வாழிடமாக அமையும். மேலும், இதற்காக 60 ஆயிரம் லிட்டர் கடல் நீர் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த அருங்காட்சியம் 24 அடி நீளமும், 10 அடி அகலமும், 15 அடி உயரமும் கொண்டதாக இருக்கும்.

டிக்கெட் கட்டணம்

சிங்கப்பூர், துபாய் மற்றும் சீனாவில் உள்ளது போல் இந்த சுரங்கப்பாதை மீன் அருங்காட்சியகம் உருவாக்கப்பட உள்ளது. இந்தியாவில் இதேபோல் குஜராத் மாநிலத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், கர்நாடகத்தில் இதுவே முதல்முறையாகும். இதை சர்வதேச அளவில் தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

பணிகள் நிறைவடைந்த பின்னர், சுரங்கப்பாதை மீன் அருங்காட்சியகத்தை காண பெரியவர்களுக்கு சாதாரண நாட்களில் ரூ.80-ம், விடுமுறை நாட்களில் ரூ.100-ம், குழந்தைகளுக்கு சாதாரண நாட்களில் ரூ.25-ம், விடுமுறை நாட்களில் ரூ.40-ம் டிக்கெட் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Next Story