மைசூருவில் வீரசாவர்க்கர் ரதயாத்திரை-எடியூரப்பா தொடங்கி வைத்தார்


மைசூருவில் வீரசாவர்க்கர் ரதயாத்திரை-எடியூரப்பா தொடங்கி வைத்தார்
x

கர்நாடகம் முழுவதும் 8 நாட்கள் நடக்கும் வீரசாவர்க்கர் ரதயாத்திரையை, மைசூருவில் நேற்று எடியூரப்பா தொடங்கி வைத்தார்.

மைசூரு:

வீரசாவர்க்கர் ரதயாத்திரை

சிவமொக்காவில் சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் வைக்கப்பட்ட வீரசாவர்க்கர் பேனர் அகற்றப்பட்டது. இதனால் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் வீரசாவர்க்கர் பற்றி பேசிய சித்தராமையாவை கண்டித்தும் குடகில் அவர் வந்த கார் மீது முட்டை வீசப்பட்டது. இந்த சம்பவத்தால் கர்நடகத்தில் கடந்த சில நாட்களாக வீரசாவர்க்கர் பற்றிதான் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.

இதற்கிடையே கர்நாடகம் முழுவதும் 23-ந்தேதி(நேற்று) முதல் 8 நாட்கள் தொடங்கி வீரசாவர்க்கர் ரதயாத்திரை நடத்தப்படுவதாக பா.ஜனதா அறிவித்தது. அதன்படி நேற்று மைசூருவில் கோட்டை ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் வீரசாவர்க்கர் ரதயாத்திரை தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதாவின் மூத்த தலைவருமான எடியூரப்பா கலந்துகொண்டு காவி கொடி காண்பித்து வீரசாவர்க்கர் ரதயாத்திரையை தொடங்கி வைத்தார். இதையடுத்து வீரசாவர்க்கர் படம் அச்சிடப்பட்டு அலங்கரிங்கப்பட்ட வாகனம் முக்கிய நகரங்களில் ஊர்வலமாக சென்றது. இதில் பா.ஜனதாவினர், இந்து அமைப்பினர் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இதற்கிடையே எடியூரப்பா, அரண்மனை வளாகத்திற்கு சென்று தசரா யானைகளை பார்வையிட்டார். அப்போது அவர், யானைகளின் தும்பிகையை தடவி அவைகளுக்கு உணவு கொடுத்தார். அவர், தங்க அம்பாரி சுமக்கும் அபிமன்யு யானையிடம் ஆசி பெற்றார். இதற்கிடையே எடியூரப்பா, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வரவேற்கத்தக்கது

வீரசாவர்க்கர் நாட்டுப்பற்றுமிக்கவர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி நாட்டுக்காக வாழ்க்கையை தியாகம் செய்தவர். இதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் வீரசாவர்க்கர் ரத யாத்திரை நடத்தப்படுகிறது. அதனால் வீரசாவர்க்கர் பற்றி தவறாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

குடகில், சித்தராமையா கார் மீது முட்டை வீசிய சம்பவத்தை பா.ஜனதா சார்பில் கண்டித்து இருக்கிறோம். மேலும் சித்தராமையாவிடம் மன்னிப்பு கேட்டு அவருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் சித்தராமையா பிடிவாதத்துடன் மடிகேரியில் போராட்டம் நடத்துவதாக தெரிவித்து இருந்த நிலையில் தற்போது போராட்டத்ைத தள்ளிவைத்தது வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

இவருடன் மந்திரி எஸ்.டி.சோமசேகர், பா.ஜனதா பிரமுகர்கள் இருந்தனர்.


Next Story