மராட்டிய மாநிலத்தில் பள்ளிகள் திறப்பு - மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு


மராட்டிய மாநிலத்தில் பள்ளிகள் திறப்பு - மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 4 Oct 2021 7:09 PM GMT (Updated: 4 Oct 2021 7:09 PM GMT)

18 மாதங்களுக்கு பிறகு மராட்டிய மாநிலத்தில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

மும்பை, 

மராட்டியத்தில் கடந்த ஆண்டு கொரோனா 2-வது அலை வேகமாக பரவியதை அடுத்து மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மூடப்பட்டன. இதன் காரணமாக ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடந்து வந்தன. இந்தநிலையில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து பள்ளிகளை மீண்டும் திறக்கவேண்டும் என்று பெற்றோர்களிடம் இருந்தும், பல்வேறு தரப்பிலும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. கொரோனா பாதிப்பு இல்லாத கிராமங்களில் 2 மாதங்களாக வகுப்புகள் நடந்து வருகின்றன.

இந்தநிலையில் பள்ளிக்கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் கடந்த மாதம் மராட்டியம் முழுவதும் அக்டோபர் 4-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தார். கிராமப்புறங்களில் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையும், நகர்புறங்களில் 8-ம் வகுப்பு 12-ம் வகுப்பு வரையும் திறக்கப்படும் என்றும் கூறினார்.

இதன்படி 18 மாதங்களுக்கு பிறகு மாநிலம் முழுவதும் நேற்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்க பிறகு சக மாணவ- மாணவிகளை நேரில் கண்டு அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து படிக்கும் ஆசையுடன் சீருடை அணிந்து பள்ளிகள் நோக்கி படை எடுத்தனர். மேலும் மாணவ செல்வங்களை வரவேற்க பள்ளி நிர்வாகமும் தயாராகவே இருந்தது. பல பள்ளிகளில் பூக்களை தூவியும், ஆரத்தி எடுத்தும் மாணவ- மாணவிகளை வரவேற்றனர். இதேபோல பல்வேறு பள்ளிகளின் மாணவர்களை வரவேற்க வாசலில் ரங்கோலி கோலம் வரைந்தும், பூக்கள் மற்றும் பலூன்களால் தோரணம் அமைத்தும் மாணவர்களை உற்சாக படுத்தினர். இதனால் மாணவ- மாணவியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே மாணவர்கள் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல சானிடைசர்கள் கொண்டு மாணவர்கள் கைகள் சுத்தப்படுத்தப்பட்டன. முக கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டது. தொட்டு கட்டிப்பிடித்து அன்பை பரிமாற தடை விதிக்கப்பட்டது. சமூக இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டனர்.

Next Story