15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்கள் உடைப்புக்கு அனுப்பப்படும்- மத்திய மந்திரி நிதின் கட்காரி தகவல்


15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்கள் உடைப்புக்கு அனுப்பப்படும்- மத்திய மந்திரி நிதின் கட்காரி தகவல்
x
தினத்தந்தி 25 Nov 2022 6:45 PM GMT (Updated: 25 Nov 2022 6:45 PM GMT)

15 ஆண்டுகள் பழமையான மத்திய அரசின் வாகனங்கள் உடைப்புக்கு அனுப்பப்படும் என மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.

மும்பை,

15 ஆண்டுகள் பழமையான மத்திய அரசின் வாகனங்கள் உடைப்புக்கு அனுப்பப்படும் என மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.

15 ஆண்டு வாகனங்கள் அழிப்பு

மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்த வேளாண் கண்காட்சி தொடக்க விழாவில் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-

15 ஆண்டுகளை நிறைவு செய்த மத்திய அரசின் அனைத்து வாகனங்களும் உடைப்புக்கு அனுப்பப்படும். பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி, இது தொடர்பான வாகன அழிப்பு கோப்பில் நேற்று கையெழுத்திட்டேன். மத்திய அரசின் இந்த கொள்கையை நான் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி உள்ளேன். அவர்களும் மாநில அளவிலும் இந்த கொள்கையை செயல்படுத்த வேண்டும்.

எத்தனால்- பிடுமின் உற்பத்தி

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2 ஆலைகள் ஏறக்குறைய பானிபட்டில் தொடங்கப்பட்டுவிட்டது. இதில் ஒரு ஆலை நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் எத்தனாலை உற்பத்தி செய்யும். மற்றொரு ஆலையில் வைக்கோல் மூலம் தினந்தோறும் 150 டன் பயோ-பிடுமின் உற்பத்தி செய்யப்படும். பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் போன்ற நெல் உற்பத்தி செய்யும் மாநிலங்கள் வைக்கோலை எரிந்து காற்று மாசை ஏற்படுத்தி வரும் நிலையில் இது மிகப்பெரிய மாற்றமாக அமையும். தற்போது வைக்கோல் எத்தனால், பயோ-பிடுமின் தயாரிக்க பயன்படுகிறது.

நமது நாட்டுக்கு 80 லட்சம் டன் பயோ-பிடுமின் தேவைப்படுகிறது. இதில் 50 லட்சம் டன் நமது நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. 25 லட்சம் டன்னை இறக்குமதி செய்கிறோம். எனவே பயோ-பிடுமின் தயாரிக்கும் ஆலைகள் நமது நாட்டில் தொடங்கப்படுவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

எரிசக்தி உற்பத்தியாளர்கள்

இதேபோல அசாமில் பயோ-எத்தனால் தயாரிக்கும் ஆலையை இந்தியன் ஆயில் நிறுவனம் தொடங்கி உள்ளது. மூங்கிலில் இருந்து இந்த பயோ-எத்தனால் தயாரிக்கப்படுகிறது. நமது விவசாயிகள் இனிமேல் உணவு உற்பத்தி மட்டுமின்றி எரிசக்தி உற்பத்தியாளர்களாகவும் இருப்பார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவ்ராஜ்சிங் சவுகானும் கலந்து கொண்டார்.



Next Story