பர்பானியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி


பர்பானியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி
x
தினத்தந்தி 12 May 2023 6:45 PM GMT (Updated: 12 May 2023 6:45 PM GMT)

பர்பானியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 5 தொழிலாளிகள் பலியாகினர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பர்பானி,

பர்பானியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 5 தொழிலாளிகள் பலியாகினர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கழிவுநீர் தொட்டி

பர்பானி மாவட்டம் சோன்பேத் தாலுகா பவுச்சா தாண்டா ஷிவாராவில் ஒப்பந்ததாரர் சுல்தான் என்பவர் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியை நடத்தி வந்தார். இந்த பணிக்காக 6 பேரை அழைத்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சுத்தம் செய்யும் பணி நடந்தது.

இரவு 9 மணி அளவில் சுத்தம் செய்ய சென்றபோது தொழிலாளி சாதிக் சேக்(வயது55) என்பவர் தவறி தொட்டியில் விழுந்தார். அவரை காப்பாற்ற ஜூனாட் சேக்(32), நவித் சேக்(28), சாருக் சேக்(28), பிரோஷ் சேக்(27) ஆகியோர் முயன்றனர்.

5 பேர் பலி

அப்போது, அவர்கள் அடுத்தடுத்து கழிவுநீர் தொட்டியின் உள்ளே இறங்கினர். ஆனால் யாரும் வெளியே வரவல்லை. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் அங்கு சென்று தொட்டியில் உள்ளே பிணமாக கிடந்த 5 பேரையும் மீட்டனர். பின்னர் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, 5 பேரும் விஷவாயு தாக்கி பலியானர்களா அல்லது மின் எந்திரத்தில் இருந்து மின்கசிவு ஏற்பட்டதால் உயிரிழந்தனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story