மராட்டிய அரசு சார்பில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி- மந்திரி சபை ஒப்புதல்


மராட்டிய அரசு சார்பில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி- மந்திரி சபை ஒப்புதல்
x
தினத்தந்தி 30 May 2023 6:45 PM GMT (Updated: 30 May 2023 6:45 PM GMT)

மராட்டிய அரசு சார்பில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கு மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

மும்பை,

மராட்டிய அரசு சார்பில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கு மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

ஒப்புதல்

மராட்டிய மந்திரி சபை நேற்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பிறகு துணை முதல்-மந்திரியும், நிதி மந்திரியுமான தேவேந்திர பட்னாவிஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு சார்பில் பிரதான் மந்திரி கிஷான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இது தலா ரூ.2 ஆயிரம் வீதம் மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று மராட்டிய அரசு சார்பிலும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் 'நமோ சேத்காரி மகாசம்மான் யோஜனா' என்ற திட்டத்திற்கு கடந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது. தற்போது இந்த திட்டத்திற்கு மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதியுதவி மத்திய அரசு நிதியுதவியை தவிர்த்து கூடுதலாக மராட்டிய விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

1 கோடி விவசாயிகள்

அதன்படி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும். இதன் மூலம் 1 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பலன் அடைவார்கள்.

இதேபோல விவசாயிகள் தரப்பில் இருந்து 1 ரூபாய் செலுத்தி பயிர்காப்பீடு செய்யும் திட்டத்திற்கும் மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது. எஞ்சி உள்ள பிரிமிய தொகையை மாநில அரசே செலுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story