அஜித்பவார் விவகாரம்: கட்சி கொள்கையை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - சரத்பவார் பேட்டி


அஜித்பவார் விவகாரம்: கட்சி கொள்கையை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - சரத்பவார் பேட்டி
x
தினத்தந்தி 2 July 2023 7:30 PM GMT (Updated: 2 July 2023 7:31 PM GMT)

பா.ஜனதா கூட்டணி அரசில் அஜித்பவார் இணைந்த விவகாரத்தில் கட்சி கொள்கையை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சரத்பவார் தெரிவித்தார்.

புனே,

பா.ஜனதா கூட்டணி அரசில் அஜித்பவார் இணைந்த விவகாரத்தில் கட்சி கொள்கையை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சரத்பவார் தெரிவித்தார்.

அரசியல் திருப்பம்

மராட்டிய அரசியலில் அதிரடி திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் அஜித்பவார், சிவசேனா- பா.ஜனதா கூட்டணி அரசின் மந்திரி சபையில் இணைந்ததுடன் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றார். மேலும் அந்த கட்சியை சேர்ந்த 8 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். இந்த திடீர் அரசியல் குழப்பத்தை அடுத்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடவடிக்கை எடுக்கப்படும்

எங்களது கட்சியின் தேசிய குழு மற்றும் கட்சியினர் சிலர் பா.ஜனதா கூட்டணி அரசில் இணைந்துள்ளனர். ஆனால் இது எங்களின் கட்சி நிலைப்பாடு இல்லை. எனவே அவர்கள் கட்சி கொள்கையை மீறி உள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி முடிவெடுக்கும். அதற்கான செயல்முறை உள்ளது. அந்த செயல்முறையின்படி நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கப்படும். எங்கள் கட்சி சட்டப்பூர்வ போராட்டத்தில் இறங்காது. அதற்கு பதிலாக மக்களிடம் சென்று அவர்களின் ஆதரவை பெறுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

குடும்பத்தில் பிளவா?

அஜித்பவாரின் இந்த நடவடிக்கை காரணமாக உங்களது வீட்டில் (குடும்பத்தில்) பிளவை ஏற்படுத்தி உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த சரத்பவார், "இது ஒரு வீட்டின் கேள்வி அல்ல, அரசியலில் இதுபோன்ற விஷயங்கள் நடக்கின்றன. அதை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும்" என்றார். மேலும் உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளடக்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணியின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சரத்பவார் பதிலளித்து கூறியதாவது:-

பிரதமருக்கு நன்றி

மூன்று கட்சிகளும் எதிர்காலத்திலும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. வரவிருக்கும் தேசிய அளவிலான எதிர்க்கட்சி கூட்டத்தில் பங்கேற்பேன். திங்கட்கிழமை(இன்று) முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களின் ஆதரவை பெற தொடங்குவேன். நாளை காரட் சென்று யஷ்வந்த்ராவ் சவானின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறேன். தேசியவாத காங்கிரஸ் கட்சி மீது யாராவது உரிமை கோரினால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் மக்களிடம் சென்று அவர்களின் ஆதரவை பெறுவோம். மக்கள் எங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார். தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலருக்கு மந்திரிசபையில் பதவி வழங்கியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை என்பதை இது காட்டுகிறது. எங்கள் மீது குற்றம் சாட்டிய அனைவரையும் இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று கூறவைத்துள்ளார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் நன்றி கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

கவலை இல்லை

அமலாக்கத்துறை விசாரணை குறித்து அஜித்பவார், சகன் புஜ்பால், திலீப் வல்சே பாட்டீல், ஹசன் முஷ்ரிப் உள்ளிட்ட சில கட்சி தலைவர்கள் பதற்றம் அடைந்திருந்தனர். இன்று நடைபெற்ற சம்பவம் மற்றவர்களுக்கு புதியதாக இருக்கலாம். ஆனால் எனக்கு இல்லை. அவர்கள் வெளியேறியது குறித்து நான் கவலைப்படவில்லை. ஆனால் அவர்களின் எதிர்காலம் குறித்து தான் கவலைப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story