மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்கு எதிராக பா.ஜனதா போட்டி போராட்டம்


மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்கு எதிராக பா.ஜனதா போட்டி போராட்டம்
x
தினத்தந்தி 16 Dec 2022 6:45 PM GMT (Updated: 16 Dec 2022 6:46 PM GMT)

மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்கு எதிராக பா.ஜனதா இன்று போட்டி போராட்டம் நடத்துகிறது.

மும்பை,

மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்கு எதிராக பா.ஜனதா இன்று போட்டி போராட்டம் நடத்துகிறது.

மகாவிகாஸ் அகாடி போராட்டம்

கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி சமீபத்தில் சத்ரபதி சிவாஜி பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார். மேலும் அவர் சாவித்ரிபாய் புலே, அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.

எனவே அவரை கண்டித்தும், கர்நாடக எல்லை பிரச்சினையில் மராட்டிய அரசின் மவுனம், மாநிலத்துக்கு வர வேண்டிய பெரிய நிறுவனங்கள் குஜராத்துக்கு சென்ற விவகாரம் உள்ளிட்ட விஷயங்களில் மாநில அரசை கண்டித்து இன்று மும்பையில் போராட்டம் நடத்த உள்ளனர்.

போட்டி போராட்டம்

இந்தநிலையில் மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்கு போட்டியாக மாநிலத்தை ஆளும் பா.ஜனதாவும் போராட்டம் நடத்த போவதாக அறிவித்து உள்ளது. சிவசேனா தலைவர் சுஷ்மா அந்தாரே பேசிய பழைய ஆடியோ பதிவை வைத்தும், சஞ்சய் ராவத் அம்பேத்கர் பிறந்த இடத்தை தவறாக கூறியதற்காகவும் மகாவிகாஸ் அகாடி மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்த போராட்டத்தை நடத்துவதாக பா.ஜனதா கூறியுள்ளது.

இதுதொடர்பாக மும்பை பா.ஜனதா தலைவர் ஆஷிஸ் செலார் கூறியதாவது:-

அம்பேத்கர் பிறந்த இடம் விவகாரத்தில் சஞ்சய் ராவத் சர்ச்சையை உருவாக்க முயற்சி செய்கிறார். இதேபோல மற்றொரு சிவசேனா தலைவர் சுஷ்மா அந்தாரே இந்து கடவுள்கள் ராமர், கிருஷ்ணர், துறவி தைனேஷ்வர் மற்றும் வர்காரி சமுதாயத்தினரை இழிவாக பேசி உள்ளார்.

இவை மராட்டியத்துக்கு எதிரான செயல் இல்லையா?. காங்கிரஸ் அம்பேத்கரை தோற்கடித்தது. ஆனாலும் உத்தவ் தாக்கரே காங்கிரசுடன் கைகோர்த்து ஆட்சி அமைத்தார். எனவே மும்பையில் உள்ள 6 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 'மன்னிப்பு கேள்' போராட்டத்தை நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினாா்.

காங்கிரஸ் கருத்து

பா.ஜனதாவின் போராட்ட அறிவிப்பு குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் நானா படோலே கூறுகையில், "மகாவிகாஸ் அகாடி கூட்டணி போராட்டம் புயலை ஏற்படுத்தும் என்ற பீதியில் பா.ஜனதாவினர் உள்ளனர்.

சத்ரபதி சிவாஜி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கவர்னர் மீது நடவடிக்கை எடுக்காத பா.ஜனதாவின் போராட்டம் நகைப்புக்குரியது " என்றார்.



Next Story