பெலகாவியை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும்- சிவசேனா வலியுறுத்தல்


பெலகாவியை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும்- சிவசேனா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 Dec 2022 6:45 PM GMT (Updated: 7 Dec 2022 6:45 PM GMT)

மராட்டியம்-கர்நாடக எல்லையில் உள்ள பெலகாவியை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

மும்பை,

மராட்டியம்-கர்நாடக எல்லையில் உள்ள பெலகாவியை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

எல்லைப் பிரச்சினையில் பதற்றம்

கர்நாடக ஆளுகைக்கு உள்பட்ட பெலகாவி மாவட்டம் மராட்டிய எல்லையில் உள்ளது. பெலகாவியில் மராத்தியர்கள் அதிகம் வசிப்பதால், அந்த மாவட்டத்தை மராட்டியத்துடன் இணைக்க வேண்டும் என்று பெலகாவியில் உள்ள மராத்திய எகீகரன் சமிதி அமைப்பும், மராட்டியமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மராட்டிய அரசு வழக்கும் தொடர்ந்துள்ளது.

இந்த எல்லைப் பிரச்சினை சுமார் 60 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், தற்போது அது விஸ்வரூபம் எடுத்துள்ளது. பெலகாவியில் மராட்டிய அரசு வாகனங்கள் கல்வீசி தாக்கப்பட்டன. மராட்டியத்தில் கர்நாடக பஸ்கள் மீது கருப்பு மை பூசப்பட்டன. இவ்வாறு கடந்த சில நாட்களாக பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இரு மாநில அரசியல் கட்சி தலைவர்களும் ஆவேசமாக பேசி வருகிறார்கள்.

சஞ்சய் ராவத் எம்.பி.

இந்த நிலையில் நேற்று உத்தவ் பாலாசாகேப் சிவசேனா (உத்தவ் தாக்கரேயின் சிவசேனா) எம்.பி.யான சஞ்சய் ராவத் நேற்று மத்திய அரசுக்கு பரபரப்பு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

பெலகாவியில் மராட்டிய வாகனங்கள் தாக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற தாக்குதல்கள் டெல்லியின் (மத்திய அரசு) துணை இல்லாமல் நடைபெற முடியாது.

மராட்டியத்தின் சோலாப்பூர், சாங்கிலி மாவட்டங்களில் உள்ள கிராமங்களை கர்நாடகத்துடன் இணைக்க வேண்டும் என்று பசவராஜ் பொம்மையை போல வேறு எந்த கர்நாடக முதல்-மந்திரியும் கோரவில்லை. இதை தட்டிக்கேட்க நமது முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேக்கு தைரியம் இல்லை.

முதல்-மந்திரி ஷிண்டேயும், துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் வாயை மூடிக்கொண்டு இருப்பது ஏன்?.

யூனியன் பிரதேசமாக...

மத்தியில் மட்டுமின்றி கர்நாடகம், மராட்டியத்திலும் பா.ஜனதா ஆட்சி தான் நடக்கிறது. ஆனால் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.

சர்ச்சைக்குரிய பெலகாவியை யூனியன் பிரதேசமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கையை முன்வைக்க முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேக்கு தைரியம் இருக்கிறதா?.

பெலகாவி பயணத்தை மராட்டிய மந்திரிகள் ரத்து செய்தது கண்டிக்கத்தக்கது. அவர்கள் பெலகாவி பயணித்து இருந்தால் எங்கள் தொண்டர்கள் அவர்களுக்கு பாதுகாப்பாக அணிவகுத்து இருப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story