எதிர்க்கட்சிகளை அழிப்பதன் மூலம் ஜனநாயக குரல்வளையை பா.ஜனதா நெரிக்கிறது - நானா பாடோலே குற்றச்சாட்டு


எதிர்க்கட்சிகளை அழிப்பதன் மூலம் ஜனநாயக குரல்வளையை பா.ஜனதா நெரிக்கிறது - நானா பாடோலே குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 6 July 2023 7:15 PM GMT (Updated: 6 July 2023 7:16 PM GMT)

எதிர்க்கட்சிகளை அழிப்பதன் மூலமாக பா.ஜனதா ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கிறது என நானா படோலே கூறியுள்ளார்.

மும்பை,

எதிர்க்கட்சிகளை அழிப்பதன் மூலமாக பா.ஜனதா ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கிறது என நானா படோலே கூறியுள்ளார்.

உயர்மட்ட குழு கூட்டம்

மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அஜித்பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 8 பேர் ஆளும் கூட்டணியில் இணைந்ததுடன், மந்திரி சபையிலும் இடம் பிடித்துள்ளனர். அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நானா படோலே பேசியதாவது:-

ரூ.70 ஆயிரம் கோடி ஊழல்

வரவிருக்கும் தேர்தல்களில் தங்களின் தோல்வி முகத்தை பா.ஜனதா உணர்ந்துள்ளது. இதன் காரணமாக எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்தக்கூடிய கேவலமான அரசியலில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜனதாவின் அதிகார வெறி அரசியல் குறித்து மாநில காங்கிரஸ் கட்சியினர் உயர்மட்ட குழு கவலை தெரிவித்துள்ளது. பா.ஜனதாவின் இந்த சர்வாதிகார போக்கை முடிவுக்கு கொண்டுவர நாங்கள் தீர்மானித்துள்ளோம். தேசியவாத காங்கிரஸ் கட்சி ரூ.70 ஆயிரம் கோடி ஊழல் செய்ததாக பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக குற்றம் சாட்டினார். ஆனால் அதேவேளையில் அந்த கட்சியை சேர்ந்த தலைவர்களான அஜித்பவார் மற்றும் பலரை கவுரவப்படுத்தி பா.ஜனதா கூட்டணி அரசில் இணைத்துக்கொண்டுள்ளார். ஊழலை பற்றி மேடைகளில் ஏறி பேசுகிறாரே தவிர நடைமுறைக்கு கொண்டு வருவதில்லை. ஒருமுறை தேசியவாத காங்கிரஸ் கட்சியை 'தேசியவாத ஊழல் கட்சி' என விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடியால் எப்படி அவர்களை மந்திரிசபையில் சேர்த்துக்கொள்ள முடிகிறது? இவ்வாறு அவர் கூறினார்.


Next Story