எல்லை பிரச்சினையில் அனைத்து கட்சி கூட்டத்தை முதல்-மந்திரி கூட்டவேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல்


எல்லை பிரச்சினையில் அனைத்து கட்சி கூட்டத்தை முதல்-மந்திரி கூட்டவேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 Dec 2022 6:45 PM GMT (Updated: 9 Dec 2022 6:46 PM GMT)

எல்லை பிரச்சினை தொடர்பாக ஆலோசனை நடத்த அனைத்து கட்சி கூட்டத்தை முதல்-மந்திரி கூட்டவேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

மும்பை,

எல்லை பிரச்சினை தொடர்பாக ஆலோசனை நடத்த அனைத்து கட்சி கூட்டத்தை முதல்-மந்திரி கூட்டவேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

பதற்றமான சூழ்நிலை

மராட்டிய- கர்நாடக எல்லை பிரச்சினை காரணமாக எல்லையில் தற்போது பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. குறிப்பாக மராத்தி மொழி பேசும் பெலகாவி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எந்த நேரத்தில் இங்கு கலவரம் வெடிக்கலாம் என்ற சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாலாசாகேப் தோரட் நேற்று இதுகுறித்து பேசியதாவது:-

முதல்-மந்திரியின் மவுனம்

மராட்டிய- கர்நாடக எல்லை பிரச்சினை பல்வேறு திருப்பங்களை கண்டு வருகிறது. கர்நாடகாவில் மராட்டிய லாரிகள், பஸ்கள் மற்றும் வாகனங்கள் சேதப்படுத்தப்படுகிறது. கர்நாடகாவில் நடைபெறும் இதுபோன்ற தாக்குதல்களை மராட்டியம் பொறுத்துகொள்ளாது.

மராட்டியத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் எல்லை பிரச்சினையில் கவலை தெரிவித்துள்ளது. மராத்தி மொழி பேசும் மக்களின் பின்னால் நாங்கள் உறுதியாக நிற்கிறோம். ஆனால் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே இந்த பிரச்சினையில் மவுனம் சாதித்து வருகிறார்.

மக்கள் கோபம்

எல்லை பிரச்சினையில் மராட்டியத்தின் நிலைப்பாடு என்ன? அவர்கள் அடுத்த நடவடிக்கை என்ன? கர்நாடகாவிலும், மத்தியிலும் பா.ஜனதா அரசு இருப்பதால், இந்த விவகாரத்தில் கர்நாடகாவுக்கு மத்திய அரசு ஏதேனும் அறிவுறுத்தி உள்ளதா? இதுபற்றி எங்களுக்கு தெரியாது. ஆனால் இந்த விவகாரம் தீவிரமானது என்பதால் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து இதுகுறித்து விவாதிக்க வேண்டும்.

மாநில அரசு இந்த விவகாரத்தில் எடுக்கும் நடவடிக்கை என்ன என்ற உண்மைகள் எங்களுக்கு விளக்கமளிக்கப்பட வேண்டும்.

கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் பிற மந்திரிகள் தொடர்ந்து மராட்டியத்திற்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.

மக்கள் மத்தியில் இந்த பிரச்சினை தொடர்பாக கோபம் அதிகமாக உள்ளது. ஆனால் மராட்டிய முதல்-மந்திரி தெளிவான மற்றும் உறுதியான நிலைப்பாட்டை இதுவரை எடுக்கவில்லை.

இதையெல்லாம் பார்க்கும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் எல்லை பிரச்சினையை தீவிரமாக எடுத்துக்கொண்டார்களா? இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story