சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டம்: உத்தவ் தாக்கரே அணிக்கு அனுமதி கிடைக்க வாய்ப்பு


சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டம்: உத்தவ் தாக்கரே அணிக்கு அனுமதி கிடைக்க வாய்ப்பு
x

சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்த உத்தவ் தாக்கரே அணிக்கு அனுமதி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மும்பை,

சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்த உத்தவ் தாக்கரே அணிக்கு அனுமதி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தசரா பொதுக்கூட்டம்

தாதரில் உள்ள சிவாஜி பார்க் மைதானத்தில் ஆண்டு தோறும் சிவசேனா கட்சி சார்பில் தசரா பொதுக்கூட்டம் நடைபெறும். தற்போது சிவசேனா கட்சி 2 ஆக உடைந்து உள்ள நிலையில், 2 அணிகளும் சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு மும்பை மாநகராட்சியிடம் விண்ணப்பித்து உள்ளன. இதில் உத்தவ் தாக்கரே அணி கடந்த மாதம் 22-ந் தேதியும், ஏக்நாத் ஷிண்டே அணி அதற்கு பிறகும் விண்ணப்பித்து உள்ளன.

எனினும் எந்த அணிக்கும் இதுவரை பொதுக்கூட்டம் நடத்த மாநகராட்சி அனுமதி வழங்கவில்லை. சிவாஜி பார்க்கில் பொதுக்கூட்டம் நடத்த உத்தவ் தாக்கரே அணிக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

அதிகாரி தகவல்

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "2016-ம் ஆண்டு அரசு தீர்மானத்தின்படி சிவசேனாவின் தசரா பொதுக்கூட்டம், அனுமதி அளிக்க கூடிய ஒரு நிகழ்ச்சி ஆகும். பொதுவாக நாங்கள் முதலில் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு தான் அனுமதி கொடுப்போம்.

அதேபோல ஒரு நிகழ்ச்சியை பாரம்பரியமாக யார் நடத்தி வருகிறார்கள் என்று பார்ப்போம். தற்போது சிவசேனாவில் இருந்தே 2 விண்ணப்பங்கள் வந்துள்ளதால், முதலில் வந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படலாம். ஆனால் தசரா பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை" என்றார்.

கோர்ட்டுக்கு சென்றால் என்ன ஆகும்?

சிவாஜி பார்க் தசரா பொதுக்கூட்டம் சிவசேனாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சி ஆகும். எனவே மும்பை மாநகராட்சி தசரா பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தினால், இந்த விவகாரம் குறித்து முறையிட கோர்ட்டுக்கு செல்லலாம். கோர்ட்டுக்கு சென்றால் 2 அணிகளுக்கும் அனுமதி கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது என அரசியல் பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.

எனவே தான் ஏக்நாத் ஷிண்டே அணியினர் முன் எச்சரிக்கையாக பி.கே.சி.யில் உள்ள எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்திலும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.


Next Story