எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மெகபூபா முப்தி அருகில் வேண்டுமென்றே தான் அமர்ந்தேன் - பட்னாவிசுக்கு, உத்தவ் தாக்கரே பதிலடி


எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மெகபூபா முப்தி அருகில் வேண்டுமென்றே தான் அமர்ந்தேன் - பட்னாவிசுக்கு, உத்தவ் தாக்கரே பதிலடி
x
தினத்தந்தி 25 Jun 2023 6:45 PM GMT (Updated: 25 Jun 2023 6:45 PM GMT)

எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தான் வேண்டுமென்றே மெகபூபா முப்தி அருகில் அமர்ந்ததாக கூறி தேவேந்திர பட்னாவிசுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி கொடுத்தார்.

மும்பை,

எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தான் வேண்டுமென்றே மெகபூபா முப்தி அருகில் அமர்ந்ததாக கூறி தேவேந்திர பட்னாவிசுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி கொடுத்தார்.

மெகா கூட்டணி

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணியை உருவாக்க முயற்சித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகள் பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டன. உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி அருகே அமர்ந்திருந்தார். இதனை துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடுமையாக விமர்சித்தார். அவர் கூறுகையில், "எதிர்க்கட்சி தலைவர்கள் தங்கள் வாரிசுகள் மற்றும் வாரிசு அரசியலை பாதுகாக்கவே ஒன்றாக கூடி உள்ளனர். காஷ்மீரில் மெகபூபா முப்தியுடன் கூட்டணி அமைத்ததற்காக பா.ஜனதாவை உத்தவ் தாக்கரே விமர்சித்தார். ஆனால் தற்போது அவர் (உத்தவ் தாக்கரே) மெகபூபா முப்தி அருகில் அமர்ந்து கூட்டணி குறித்து பேசுகிறார்" என்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

சிறப்பு அந்தஸ்து

நான் வேண்டுமென்றே தான் மெகபூபா முப்தி அருகில் சென்று அமர்ந்தேன். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு நீக்கப்படாது என்ற நிபந்தனையுடன், பா.ஜனதா தங்களுடன் கூட்டணி அமைத்தது என்று அவர் என்னிடம் கூறினார். உங்களுடன் இணைபவர்கள் தூய்மையானவர்கள். நீங்கள்(பா.ஜனதா) மெகபூபாவுடன் கூட்டணி வைத்தபோதே இந்துத்வாவை விட்டு வெளியேறி விட்டீர்கள். உங்கள் போலி இந்துத்வா போர்வையை நாங்கள் கிழிப்போம். எனது குடும்பத்தின் மீது நான் மிகவும் உணர்திறன் உடையவன். நீங்கள்(பட்னாவிஸ்) இப்படி தரம் தாழ்ந்து செயல்பட கூடாது. உங்களுக்கும் குடும்பம் உள்ளது. உங்கள் குடும்பத்தை பற்றிய வாட்ஸ் அப் தகவல்கள் வெளிவந்தன. நாங்கள் அதைப்பற்றி பேச தொடங்கவில்லை. ஏனெனில் நாங்கள் அவருடைய குடும்பம் பற்றி பேசினால் அவர் 'சாவாசனம்' (பிணம் போல செய்யும் யோகா) செய்ய வேண்டி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

திறந்த புத்தகம்

துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா மற்றும் சூதாட்ட தரகர் அனில் ஜெய்சிங்கானி மற்றும் அவரது மகள் அனிக்ஷா ஆகியோருக்கு இடையேயான வாட்ஸ்அப் தகவல்கள் வெளியானதை உத்தவ் தாக்கரே இப்படி குறிப்பிட்டார். இதற்கு பதில் அளித்த தேவேந்திர பட்னாவிஸ், "நானும் எனது குடும்பமும் ஒரு திறந்த புத்தகம். குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள வாட்ஸ்அப் தகவல்கள் ஒரு காரணத்துடன் செய்யப்பட்டவை ஆகும்" என்றார்.


Next Story