புனேயில் விசாரணை கைதி அடித்து கொல்லப்பட்டதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு- போலீசார் மறுப்பு தெரிவித்து விளக்கம்


புனேயில் விசாரணை கைதி அடித்து கொல்லப்பட்டதாக   குடும்பத்தினர் குற்றச்சாட்டு- போலீசார் மறுப்பு தெரிவித்து விளக்கம்
x

புனேயில் போலீஸ் காவலில் வாலிபர் பலியான சம்பவத்தில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். ஆனால் இதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்தனர்.

புனே,

புனேயில் போலீஸ் காவலில் வாலிபர் பலியான சம்பவத்தில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். ஆனால் இதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்தனர்.

வாலிபர் பலி

புனே ரெயில்வே போலீசார் கடந்த 17-ந் தேதி நாகேஷ் பவார் (வயது 29) என்ற வாலிபரை கொள்ளை வழக்குகள் தொடர்பாக கைது செய்தனர். வாலிபருடன் அவரது மாமனாரும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் போலீஸ் காவலில் வாலிபருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசார் அவரை சசூன் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சோ்த்தனர். ஆனால் வாலிபர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

குடும்பத்தினர் குற்றச்சாட்டு

இந்தநிலையில் போலீசார் அடித்து துன்புறுத்தியால் தான் வாலிபர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர். இதுகுறித்து சமூகஆர்வலர் கிரிஷ் பரபுனே கூறுகையில், "நாகேஷ் பவார் புனே கர்ஜத் - ஜாம்கேட் பகுதியில் மாமனார் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 13, 14, 15-ந் தேதிகளில் அகுர்தி பகுதியில் தேசிய கொடி விற்பனை செய்து வந்தார். 16-ந் தேதி போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்று உள்ளனர். வாலிபர் உயிரிழக்கும் வரை அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதை போலீசார் குடும்பத்தினருக்கு தெரிவிக்கவில்லை. போலீசாரின் துன்புறுத்தலால் தான் அவர் பலியாகி உள்ளார். எனவே வாலிபரின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்." என்றார்.

போலீசார் மறுப்பு

எனினும் குடும்பத்தினரின் குற்றச்சாட்டை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு சதானந்த் வாய்சே பாட்டீல் மறுத்து உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

நாகேஷ் பவார் 8 கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்தார். மேலும் இவர் மராட்டியம், ஆந்திராவில் செயல்பட்டு வரும் மிகப்பொிய கொள்ளை கும்பலை சேர்ந்தவர். அவரின் மாமனாருக்கும் இதில் தொடர்பு உள்ளது. எனவே மாமனாருடன் வாலிபரை கடந்த 17-ந் தேதி கைது செய்தோம். அவர் போலீஸ் காவலில் இருந்தார். 20-ந் தேதி காய்ச்சல், இருமல் காரணமாக வாலிபரை ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். ஆஸ்பத்திரியில் இருந்த போது வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி அவரது போலீஸ் காவலை நீட்டித்தார். அப்போது நீதிபதியிடம் வாலிபரே அவர் போலீசாரால் துன்புறுத்தப்படவில்லை என கூறினாா். போலீஸ்நிலைய லாக்அப் கண்காணிப்பு கேமராவில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை. நிமோனியா காரணமாகவே வாலிபர் உயிரிழந்து உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story