இந்த வார இறுதியில் பருவமழை தொடங்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்


இந்த வார இறுதியில் பருவமழை தொடங்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 21 Jun 2023 7:30 PM GMT (Updated: 21 Jun 2023 7:30 PM GMT)

மும்பையில் இந்த வார இறுதியில் பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மும்பை, ஜூன்.22-

மும்பையில் இந்த வார இறுதியில் பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பருவமழை தாமதம்

மராட்டியமும், அதன் தலைநகருமான மும்பையும் தண்ணீர் தேவைக்கு தென்மேற்கு பருவ மழையை நம்பியே உள்ளது. வழக்கமாக மும்பையில் ஜூன் மாதம் 10 அல்லது 11-ந் தேதிகளில் பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு 20-ந் தேதியை கடந்தும் இன்னும் மும்பையில் பருவ மழை தொடங்கவில்லை. மாநிலத்தின் பல பகுதிகளிலும் இதே நிலை தான். குறிப்பாக விதர்பா பகுதிகளில் மழைக்காலம் என்பதே தெரியாத அளவுக்கு வெப்ப அலை மக்களை வறுத்தெடுத்து வருகிறது. இந்தநிலையில் மும்பையில் பருவ மழை தொடங்க தாமதமாகி வருவதற்கான காரணத்தை வானிலை ஆய்வு மையம் தெளிவுபடுத்தி உள்ளது. இது குறித்து மும்பை வானிலை ஆய்வு மைய தலைவர் எஸ்.ஜி. காம்ப்ளே கூறியதாவது:-

இந்த வார இறுதியில்...

பருவமழை கடந்த ஜூன் மாதம் 11-ந் தேதி அன்றே ரத்னகிரி கடலோர பகுதியை அடைந்தது. ஆனால் கடந்த வியாழக்கிழமை குஜராத்தில் கரையை கடந்த பிபர்ஜாய் புயல் காரணமாக பருவமழை முன்னேறி வர முடியவில்லை. இப்போது நிலைமை பருவமழையின் முன்னேற்றத்திற்கு சாதகமாகி வருகிறது. வருகிற 23-ந் தேதி மற்றும் 25-ந் தேதிக்கு இடையே, அதாவது இந்த வார இறுதியில் மும்பையை பருவமழை வந்தடையும். இவ்வாறு அவர் கூறினார். தென்மேற்கு பருவமழை இயல்பாக இந்திய நிலப்பரப்பில் உள்ள கேரளாவை ஜூன் 1-ந் தேதியே வந்தடையும். ஆனால் ஒரு வார தாமதத்திற்கு பிறகு கடந்த 8-ந் தேதி பருவ மழை இந்திய நிலப்பரப்பை அடைந்தது குறிப்பிடத்தக்கது.



Next Story