மும்பை பள்ளி பஸ் கட்டணம் 20 சதவீதம் அதிகரிக்கும்- உரிமையாளர் சங்கம் தகவல்


மும்பை பள்ளி பஸ் கட்டணம் 20 சதவீதம் அதிகரிக்கும்- உரிமையாளர் சங்கம் தகவல்
x

மும்பையில் பள்ளி பஸ் கட்டணம் 20 சதவீதம் அதிகரிக்கும் என பள்ளி பஸ் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

மும்பையில் பள்ளி பஸ் கட்டணம் 20 சதவீதம் அதிகரிக்கும் என பள்ளி பஸ் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.

கட்டணம் அதிகரிக்கும்

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் சரியாக செயல்படவில்லை. இதனால் பள்ளி பஸ் உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. இன்றுமுதல் மும்பையில் பாதி பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்தநிலையில் நடப்பாண்டில் பள்ளி பஸ் கட்டணம் 20 சதவீதம் அதிகரிக்கும் என பள்ளி பஸ் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

இதுகுறித்து பள்ளி பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகி ரமேஷ் மணியன் கூறியதாவது:-

பள்ளி பஸ் கட்டணம் 20 சதவீதம் முதல் அதற்கு மேலும் அதிகரிக்கப்பட உள்ளது. பள்ளி மற்றும் பகுதிகளை பொறுத்து கட்டணம் உயர்த்தப்படும். பெட்ரோல், டீசல் உயர்வு, டிரைவர், உதவியாளர்கள் சம்பளம் அதிகரிப்பு, பஸ் விலை, ஆர்.டி.ஒ. கட்டணம், போக்குவரத்து விதிமீறல் அபராதம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் பள்ளி பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெற்றோர் கவலை

இந்தநிலையில் பள்ளி பஸ் கட்டண உயர்வு பெற்றோருக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பெற்றோர் ஒருவர் கூறுகையில், "எனது மகள் படிக்கும் பள்ளி பைகுல்லாவில் உள்ளது. எங்களது வீடு 3 கி.மீ. தொலைவில் காலாசவுக்கி பகுதியில் உள்ளது. இதற்காக மாத வேன் வாடகை ரூ.900 கொடுத்து வந்தோம். இதை ரூ.1,300 முதல் ரூ.1,500 வரை அதிகரிக்க உள்ளதாக கேள்வி பட்டேன். இவ்வளவு குறுகிய தூரத்திற்கு இந்த கட்டணம் மிகவும் அதிகம். பள்ளி பஸ் கட்டண உயர்வு குறித்து பள்ளி தரப்பில் எதுவும் இதுவரை கூறப்படவில்லை" என்றார்.

இதேபோல பள்ளி பஸ் கட்டணம் மிகவும் அதிகமானால் குழந்தைகளை ஆட்டோ, வாடகை கார்களில் குழுவாக அனுப்புவது குறித்தும் பெற்றோர்கள் யோசித்து வருகின்றனர்.


Next Story