மேல்-சபை துணைத்தலைவர் பதவியில் இருந்து நீலம் கோரேவை நீக்க வேண்டும் - கவர்னரை சந்தித்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்


மேல்-சபை துணைத்தலைவர் பதவியில் இருந்து நீலம் கோரேவை நீக்க வேண்டும் - கவர்னரை சந்தித்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 July 2023 6:45 PM GMT (Updated: 17 July 2023 6:45 PM GMT)

நீலம் கோரேவை மேல்-சபை துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கவர்னர் ரமேஷ் பயசை சந்தித்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

மும்பை,

நீலம் கோரேவை மேல்-சபை துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கவர்னர் ரமேஷ் பயசை சந்தித்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

கட்சி மாறிய நீலம் கோரே

மராட்டிய மேல்-சபை துணை தலைவராக நீலம் கோரே உள்ளார். இவர் கடந்த 7-ந் தேதி உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவில் இருந்து விலகி, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுக்கு தாவினார். மாநில அரசு ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சரியான பாதையில் செல்வதால் கட்சி மாறியதாக அவர் கூறினாா். மேலும் பெண்கள் விவகாரம், ஒட்டுமொத்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஷிண்டே கட்சிக்கு சென்றதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து அவர் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவில் இருந்து நீக்கப்பட்டார்.

பதவியில் இருந்து நீக்க வேண்டும்

இந்தநிலையில் கட்சி மாறிய நீலம் கோரேயை மேல்-சபை துணை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. இது தொடர்பாக உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா, காங்கிரஸ் மற்றும் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் பிரிவினர் நேற்று கவர்னர் ரமேஷ் பயசை சந்தித்து மனு கொடுத்தனர். பின்னர் மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் அம்பாதாஸ் தான்வே கூறுகையில், "நீலம் கோரே உத்தவ் பாலாசாகேப் சிவசேனாவில் இருந்தார். அவர் ஏக்நாத் ஷிண்டே கட்சியில் சேர்ந்த பிறகு நாங்கள் அவரை கட்சியில் இருந்து நீக்கி உள்ளோம். அவர் மேல்-சபை துணை தலைவராக இருக்கும் தகுதியை இழந்து உள்ளார். எனவே அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கவர்னரை சந்தித்து வலியுறுத்தினோம்" என்றார். ஏற்கனவே மேல்-சபை தலைவர் பதவி காலியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story