ஜனாதிபதி தேர்தலை எதிர்க்கட்சிகள் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்- சிவசேனா கருத்து


ஜனாதிபதி தேர்தலை எதிர்க்கட்சிகள் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்- சிவசேனா கருத்து
x

ஜனாதிபதி தேர்தலை எதிர்க்கட்சிகள் தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும் என்றும், கோபால கிருஷ்ண காந்தி, பரூக் அப்துல்லாவால் வலுவான போட்டியை கொடுக்க முடியாது என்றும் சிவசேனா கருத்து கூறியுள்ளது.

மாவட்ட செய்திகள்

மும்பை,

ஜனாதிபதி தேர்தலை எதிர்க்கட்சிகள் தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும் என்றும், கோபால கிருஷ்ண காந்தி, பரூக் அப்துல்லாவால் வலுவான போட்டியை கொடுக்க முடியாது என்றும் சிவசேனா கருத்து கூறியுள்ளது.

ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவதை அடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான கூட்டம் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் கடந்த புதன்கிழமை டெல்லியில் நடந்தது. இதில் காங்கிரஸ் உள்பட 17 கட்சிகள் கலந்து கொண்டன.

கூட்டத்தில் சரத்பவாரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த முன்மொழியப்பட்டது. எனினும் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். இந்தநிலையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் மீண்டும் வருகிற 20 அல்லது 21-ந் தேதி மும்பையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

சிவசேனா கருத்து

இந்தநிலையில் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் தேர்வு விவகாரம் தொடர்பாக சிவசேனா அதிருப்தி கலந்த கருத்தை கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த கட்சி பத்திரிகையான சாம்னாவில் கூறியிருப்பதாவது:-

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்த மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோரின் பெயர்கள் அடிப்படுகின்றன. அவர்களால் ஜனாதிபதி தேர்தலில் கடும் போட்டியை கொடுக்க முடியாது. மறுபுறம் மத்திய ஆட்சியாளர்களும் பிரகாசமான வேட்பாளருடன் வரவில்லை.

5 ஆண்டுகளுக்கு முன் 2, 3 பேர் மட்டுமே சேர்ந்து ராம்நாத் கோவிந்தின் பெயரை தேர்வு செய்தனர். இந்த ஆண்டும் அவர்கள் அப்படி தான் செய்ய உள்ளனர். சரத்பவார் இல்லையெனில் வேறு யார்?. இந்த கேள்விக்கான பதிலை 6 மாதத்திற்கு முன்பே தேடியிருக்க வேண்டும். அப்போது ஜனாதிபதி தேர்தலை எதிர்க்கட்சிகள் எவ்வளவு தீவிரமாக எடுத்து கொண்டு இருக்கிறது என்பது தெரிந்து இருக்கும்.

தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்

ஜனாதிபதி தேர்தலில் வலுவான வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகளால் முடியவில்லை எனில், இவர்களால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தகுதியான பிரதமரை எப்படி தர முடியும் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழும்.

மம்தா பானர்ஜி ஜனாதிபதி தேர்தலை, நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கிறார். எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி தேர்தலை தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும்.

ரப்பர் ஸ்டாம்ப் அல்ல

ஜனாதிபதி வெறும் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல. அரசியல் அமைப்பு, நீதி துறையின் காவலர். நாடாளுமன்றம், ஊடகம், நீதித்துறை மற்றும் நிர்வாகம் அதிகாரம் உள்ளவர்கள் முன் மண்டியிட்டு நிற்கிறது. நாட்டில் மத, சமூக மோதல்களும் அதிகரித்து உள்ளன. இந்த நேரத்தில் ஜனாதிபதி மவுனமாக இருக்கலாமா?. ஆனால் ஜனாதிபதி இந்த விவகாரத்தில் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. இது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தானது. ஜனாதிபதி முப்படைகள் மற்றும் நீதித்துறையின் தலைவர் ஆவார். ஜனாதிபதி நாற்காலியில் இருப்பவர் நாட்டிற்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். ஆனால் கடந்த சில காலமாக ஜனாதிபதியால் அவர் விரும்புவதை செய்ய முடியவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story