இர்சல்வாடி நிலச்சரிவில் 2 குடும்பத்தை சேர்ந்த அனைவரும் பலியான பரிதாபம்; தேடுதல் பணியை நிறுத்திய மீட்பு குழுவினர் வெளியேறினர்


இர்சல்வாடி நிலச்சரிவில் 2 குடும்பத்தை சேர்ந்த அனைவரும் பலியான பரிதாபம்; தேடுதல் பணியை நிறுத்திய மீட்பு குழுவினர் வெளியேறினர்
x
தினத்தந்தி 24 July 2023 7:00 PM GMT (Updated: 24 July 2023 7:01 PM GMT)

இர்சல்வாடி நிலச்சரிவு துயரத்தில் 2 குடும்பத்தை சேர்ந்த ஒட்டுமொத்த உறுப்பினர்களும் பலியான சோகம் வெளியாகி உள்ளது. தேடுதல் பணியை நிறுத்திய மீட்பு குழுவினர் நேற்று அங்கிருந்து வெளியேறினர்.

மும்பை,

இர்சல்வாடி நிலச்சரிவு துயரத்தில் 2 குடும்பத்தை சேர்ந்த ஒட்டுமொத்த உறுப்பினர்களும் பலியான சோகம் வெளியாகி உள்ளது. தேடுதல் பணியை நிறுத்திய மீட்பு குழுவினர் நேற்று அங்கிருந்து வெளியேறினர்.

தேடுதல் பணி

ராய்காட் மாவட்டத்தில் உள்ள இர்சல்வாடி மலை கிராமத்தில் கனமழை காரணமாக கடந்த 4-ந் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்குள்ள 17-க்கும் அதிகமான வீடுகள் மண்ணில் புதைந்தன. மேலும் பலர் மாயமாகினர். அந்த கிராமம் மலையில் அமைந்துள்ளதால், சாலை வசதி இல்லை. மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்டு படையினர் ஈடுபட்டனர். 1,100 பேரை கொண்ட குழுவின் 4 நாள் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் 27 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். 57 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமையுடன் மீட்பு படையினர் தங்கள் தேடுதல் பணியை முடித்துக்கொண்டனர். இதுகுறித்து மாவட்ட பொறுப்பு மந்திரி உதய் சமந்த் கூறியதாவது:-

மந்திரி தகவல்

தேசிய பேரிடர் மீட்பு படையினர் தேடுதல் பணியை முடித்துக்கொண்டனர். காணாமல் போன உறவினர்கள் மண்ணுக்கடியில் புதைந்து இறந்துவிட்டதாக அவர்களின் உறவினர்கள் நம்புகின்றனர். எனவே அவர்கள் மீட்பு பணியை முடித்துகொள்ள ஒப்புக்கொண்டனர். நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மக்கள் ஒன்றுகூடுவதை கட்டுப்படுத்தும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அங்கு யாரும் கூட்டமாக கூட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளோம். இந்த கிராமத்தில் 228 பேர் இருந்தனர். அவர்களில் 57 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை. 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது. 2 குடும்பங்களை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் உயிரிழந்துவிட்டனர். 41 குடும்பத்தை சேர்ந்த 144 பேர் அருகில் உள்ள கோவிலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறிருந்தார்.

மீட்பு குழுவினர் வெளியேறினர்

இந்த நிலையில் தேடுதல் மற்றும் மீட்பு பணி முடிவடைந்ததை அடுத்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று அந்த இடத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் அமைந்திருந்த தற்காலிக முகாம்களும் அகற்றப்பட்டன. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் பாதுகாப்புக்காக ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் 3 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த குழு பகலில் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.



Next Story