நீதிபதியின் காரை உல்லாச சவாரிக்கு எடுத்து சென்ற போலீஸ்காரர்- பணி நீக்கம் செய்யப்பட்டார்


நீதிபதியின் காரை உல்லாச சவாரிக்கு எடுத்து சென்ற போலீஸ்காரர்- பணி நீக்கம் செய்யப்பட்டார்
x
தினத்தந்தி 23 May 2023 6:45 PM GMT (Updated: 23 May 2023 6:46 PM GMT)

நீதிபதியின் காரை உல்லாச சவாரிக்கு எடுத்து சென்ற போலீஸ்காரர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பை ஐகோர்ட்டு நாக்பூர் கிளையின் நீதிபதியாக இருப்பவர் வால்மீகி சா மெனசஸ். அரசு பங்களாவில் நிறுத்தப்பட்டு இருந்த இவரது கார் கடந்த ஏப்ரல் 4-ந் தேதி சேதமடைந்து இருந்தது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது நீதிபதியின் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் அமித் ஜில்பே காரை உல்லாச சவாரிக்கு எடுத்து சென்று விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. அமித் ஜில்பே சம்பவத்தன்று நீதிபதியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அவர் நீதிபதியின் அனுமதி இல்லாமல் அவரது அரசு காரை உல்லாச சவாரிக்கு எடுத்து சென்றார். இரவு 11 மணி அளவில் போலீஸ்காரர் ஓட்டிச்சென்ற நீதிபதியின் கார் வாயுசேனா நகர் பகுதியில் உள்ள சாலையோர மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. போலீஸ்காரர் விபத்து பற்றி யாரிடமும் கூறாமல் மீண்டும் நீதிபதியின் பங்களாவில் காரை நிறுத்தியது தெரியவந்தது.

இந்தநிலையில் அனுமதியில்லாமல் ஐகோர்ட்டு நீதிபதியின் காரை உல்லாச சவாரிக்கு எடுத்து சென்று விபத்தை ஏற்படுத்திய போலீஸ்காரர் அமித் ஜில்பே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் காரை பழுதுபார்க்க ஆன செலவு ரூ.2.28 லட்சமும் போலீஸ்காரரின் பணி ஓய்வு பலன்களில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என நாக்பூர் போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமார் கூறினார்.


Next Story