ஷிண்டே அணியினர் தங்களை சிவசேனா என்று கூற முடியாது- சஞ்சய் ராவத் பேட்டி


ஷிண்டே அணியினர் தங்களை சிவசேனா என்று கூற முடியாது- சஞ்சய் ராவத் பேட்டி
x

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியினர் தங்களை சிவசேனா என்று கூறிகொள்ள முடியாது என சஞ்சய் ராவத் கூறினார்.

மும்பை,

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியினர் தங்களை சிவசேனா என்று கூறிகொள்ள முடியாது என சஞ்சய் ராவத் கூறினார்.

மற்றொரு பின்னடைவு

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க் கள் அணி தற்போது பா.ஜனதாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைந்துள்ளது. இதனால் சிவசேனா இரண்டாக பிளவுபட்டுள்ளது.

இந்த நிலையில் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பு, சட்டசபை சபாநாயகர் ராகுல் நர்வேகர், சிவசேனாவின் சட்டமன்ற கட்சி தலைவரான அஜய் சவுத்ரியை பதவியில் இருந்து நிக்கிவிட்டு, ஏக்நாத் ஷிண்டேவை மீண்டும் அந்த பதவியில் அமர்த்தினார்.

இதேபோல சிவசேனாவின் தலைமை கொறடா பதவியில் இருந்து சுனில் பிரபுவை நீக்கவிட்டு, ஏக்நாத் ஷிண்டே பிரிவை சேர்ந்த பாரத் கோகவாலேவை அந்த பதவியில் நியமிக்கப்பட்டதை அங்கீகரித்தார். இந்த நடவடிக்கை முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு மேலும் ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்தநிலையில் டெல்லியில் நிருபர்களிடம் பேசிய சிவசேனா கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறியதாவது:-

கோர்ட்டில் போராட்டம்

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் முதலில் தங்களை தாங்களே சில கேள்விகளை கேட்டுக்கொள்ள வேண்டும். அவர்கள் கட்சியின் சின்னத்தை பயன்படுத்தினர். அதன்மூலம் கிடைத்த வெற்றி உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் பயன்படுத்தினர். பின்னர் அதே கட்சியை உடைத்துள்ளனர்.

நாங்கள் நிச்சயமாக கோர்ட்டில் இதை எதிர்த்து போராடுவோம். சிவசேனாவில் இருந்து ஏக்நாத் ஷிண்டே பிரிவினர் வெளியேறிவிட்டனர். பின்னர் அவர்கள் எப்படி தங்கள் குழுவை அசல் சிவசேனா கட்சி என்று கூற முடியும்.

இடைநீக்கம்

நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என்ற கட்சியின் உத்தரவை மீறியதற்காக ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் சரத் யாதவை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இடைநீக்கம் செய்தார். இந்த நிகழ்ச்சி நாடாளுமன்றத்தில் கூட நடக்கவில்லை. இருப்பினும் அவர் நடவடிக்கையை எதிர்கொண்டார்.

இருப்பினும் 16 எம்.எல்.ஏ.க்கள் மீது இதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கும்போது. அத்தகைய விதிகள் எங்களுக்கு பொருந்தாது என்று கூறப்படுகிறது. இது ஏற்புடையதா?

ஒரு நபர் அல்லது ஒரு கட்சியின் வசதிக்கேற்ப தீர்ப்பு வழங்கினால், அது நாடாளுமன்ற ஜனநாயகம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story