சரத்பவார் தான் விதைத்ததை அறுவடை செய்கிறார் - கிரிஷ் மகாஜன் கூறுகிறார்


சரத்பவார் தான் விதைத்ததை அறுவடை செய்கிறார் - கிரிஷ் மகாஜன் கூறுகிறார்
x
தினத்தந்தி 4 July 2023 7:45 PM GMT (Updated: 4 July 2023 7:46 PM GMT)

சரத்பவார் தான் விதைத்த விதையை தான் தற்போது அறுவடை செய்கிறார் என மந்திரி கிரிஷ் மகாஜன் கூறியுள்ளார்.

மும்பை,

சரத்பவார் தான் விதைத்த விதையை தான் தற்போது அறுவடை செய்கிறார் என மந்திரி கிரிஷ் மகாஜன் கூறியுள்ளார்.

இரட்டை நிலைப்பாடு

மராட்டியத்தில் திடீர் திருப்பமாக பா.ஜனதா கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் உள்பட 9 எம்.எல்.ஏ.க்கள் இணைந்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பா.ஜனதா தலைவரும், மந்திரியுமான கிரிஷ் மகாஜன் கூறியதாவது:-

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அஜித்பவாரின் முடிவை ஜனநாயக நடைமுறைகளை இழிவுபடுத்தும் நடவடிக்கை என விமர்சித்ததாக கேள்விப்பட்டேன். அவர் இப்படிப்பட்ட இரட்டை நிலைப்பாட்டை எடுக்க கூடாது. அவர் விதைத்ததை தான் அறுவடை செய்கிறார். அவர் இதுபோன்ற செயல்களை செய்யும்போது ஜனநாயகமாக தெரிந்தது. அஜித்பவார் உள்பட அவரது எம்.எல்.ஏ.க்கள் அவரை விட்டு விலகிவிட்டனர். அவரது மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்திற்கு நாங்கள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். 1978-ம் ஆண்டு மாநிலத்தில் வசந்ததாதா பாட்டீலின் அரசை சரத்பவார் கவிழ்த்ததை கிரிஷ் மகாஜன் அப்படி குறிப்பிட்டார்.

இலாகா ஒதுக்கீடு

தேசியவாத காங்கிரஸ் இணைந்திருக்கும் நிலையில் இலாகா ஒதுக்கீடு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "இது முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் தனி உரிமை ஆகும். அஜித்பவார், பிரபுல் படேல், சகன் புஜ்பால் உள்ளிட்ட தலைவர்கள் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை இது தொடர்பாக சந்தித்து பேசி உள்ளனர். அவர்கள் இதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்" என்றார். அதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திவந்த பா.ஜனதா கட்சி தற்போது அவர்களுடன் கைகோர்த்து இருப்பதை காங்கிரஸ் கேலி செய்து வருகிறது. இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டுவது அரசியலின் ஒரு பகுதியாகும். அரசியலும் நிச்சயமற்ற தன்மை உள்ளது" என்றார்.


Next Story