தேசியவாத காங்கிரஸ் கட்சி விவகாரம் குறித்து சட்ட வல்லுனர்களுடன் சரத்பவார் ஆலோசனை - கட்சி வட்டாரங்கள் தகவல்


தேசியவாத காங்கிரஸ் கட்சி விவகாரம் குறித்து சட்ட வல்லுனர்களுடன் சரத்பவார் ஆலோசனை - கட்சி வட்டாரங்கள் தகவல்
x
தினத்தந்தி 4 July 2023 7:15 PM GMT (Updated: 4 July 2023 7:16 PM GMT)

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் நிலவும் நெருக்கடி குறித்து சட்ட வல்லுனர்களிடம் சரத்பவார் நேற்று ஆலோசனை நடத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் நிலவும் நெருக்கடி குறித்து சட்ட வல்லுனர்களிடம் சரத்பவார் நேற்று ஆலோசனை நடத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கட்சியில் பிளவு

மராட்டிய அரசியலில் எதிர்பாராத திருப்பமாக சிவசேனா- பா.ஜனதா அரசில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். மேலும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 8 பேரும் மந்திரியாக பதவியேற்றனர். தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 53 பேரில் 40-க்கும் மேற்பட்டவர்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக அஜித்பவார் தெரிவித்தார். அஜித்பவாரின் இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாக கூறிய சரத்பவார் கட்சி கொள்ளைகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் அஜித்பவார் உள்பட 9 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க கோரி சபாநாயகரிடம் சரத்பவார் தரப்பு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் சத்தாரா சுற்றுப்பயணத்தில் இருந்து மும்பை திரும்பிய சரத்பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து சட்டவல்லுனர்களுடன் ஆலோசித்ததாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கிளைட் க்ராஸ்டோ கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

10-வது அட்டவணை

இந்த பிரச்சினை அரசியலமைப்பின் 10-வது அட்டவணையை பற்றியது என்பதால் சட்ட கருத்தை பெறுவது மிகவும் அவசியமாகும். அஜித்பவார் தலைமையிலான அணிக்கு 13 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுக்கு மேல் இல்லை. மேலும் அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் விதிகளை பயன்படுத்த முடியும். நாளை(இன்று) மதியம் 1 மணிக்கு சரத்பவார் கூட்டியுள்ள கூட்டத்தில் சரத்பவாரின் உண்மையான ஆதரவாளர்கள் எண்ணிக்கை குறித்த தெளிவான விவரம் வெளிவரும். இவ்வாறு அவர் கூறினார்.

சபாநாயகருக்கு கோரிக்கை

ஏற்கனவே கட்சிதாவல் தடை சட்டத்தின் கீழ் மந்திரி பதவி ஏற்றவர்களை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி தேசியவாத காங்கிரஸ் கட்சி தரப்பில் இருந்து சபாநாயகருக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த 10-வது அட்டவணை பதவி ஆசை, பொருள் ஆதாயம் அல்லது வேறு காரணங்களால் தூண்டப்பட்டு கட்சி தாவுவதை தடுக்க வடிவமைக்கப்பட்டதாகும். அஜித்பவார் துணை முதல்-மந்திரியாக பதவியேற்ற நிலையில் சரத்பவார் அளித்த பேட்டியில் "தான் அவர்களுக்கு எதிராக சட்டபோராட்டம் நடத்த மாட்டேன். அதற்கு பதிலாக மக்களின் ஆதரவை பெற முயற்சி செய்வேன்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story