நிலச்சரிவு அபாயத்தில் இருந்து தப்பிக்க முயன்ற எங்களை மலையடிவாரத்தில் தங்கவிடாமல் வன அதிகாரிகள் தடுத்து விட்டனர் - இர்சல்வாடி கிராமமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு


நிலச்சரிவு அபாயத்தில் இருந்து தப்பிக்க முயன்ற எங்களை மலையடிவாரத்தில் தங்கவிடாமல் வன அதிகாரிகள் தடுத்து விட்டனர் - இர்சல்வாடி கிராமமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 22 July 2023 7:15 PM GMT (Updated: 22 July 2023 7:15 PM GMT)

அசம்பாவிதம் நடக்கும் என முன்கூட்டியே தொிந்து கொண்டு, மலையடிவாரத்தில் தங்க முயன்ற தங்களை வனத்துறை அதிகாரிகள் தடுத்துவிட்டனர் என இர்சல்வாடி கிராம மக்கள் கூறியுள்ளனர்.

மும்பை,

அசம்பாவிதம் நடக்கும் என முன்கூட்டியே தொிந்து கொண்டு, மலையடிவாரத்தில் தங்க முயன்ற தங்களை வனத்துறை அதிகாரிகள் தடுத்துவிட்டனர் என இர்சல்வாடி கிராம மக்கள் கூறியுள்ளனர்.

உருண்டு விழுந்த பாறை

மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டம் இர்சல்வாடி பழங்குடியின மக்கள் சுமார் 150 ஆண்டுகளாக மலையில் வசித்து வருகின்றனர். இதனால் இயற்கை பேரழிவுகளை கணிக்கும் திறன் அந்த மக்களுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் மலை உச்சியில் இருந்து பாறை ஒன்று உருண்டு விழுந்ததால் விபரீதம் நடக்க இருப்பதை உணர்ந்த அவர்கள் மழைக்காலத்தில் மட்டும் மலையடிவாரத்தில் வசிக்க தற்காலிக கூடாரங்களை அமைத்து உள்ளனர். ஆனால் அந்த கூடாரங்களை வனத்துறை அப்புறப்படுத்திவிட்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

அனுமதிக்கவில்லை

இதுதொடர்பாக நிலச்சரிவில் சகோதரனை இழந்த மோகன் பார்டி (23) என்ற பழங்குடியின வாலிபர் கூறியதாவது:- சில காலத்துக்கு முன் பாறை ஒன்று மலையில் இருந்து வந்து விழுந்தது. அப்போதே ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்க போகிறதை உணர்ந்தோம். மலையில் இருந்து கீழே இறங்கி தங்க அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. மனிதாபிமானம் அடிப்படையில் எங்களை தங்க அதிகாரிகள் அனுமதித்து இருந்தால் பெரும் உயிரிழப்பு தடுக்கப்பட்டு இருக்கும். இவ்வாறு அவர் வேதனையுடன் கூறினார்.

கூடாரங்களை அகற்றினர்

பிராப் பார்டி என்ற நபர் கூறுகையில், " மழைக்காலத்தில் வாழ மலையடிவாரத்தில் தற்காலிக கூடாரங்கள் கட்டினோம். ஆனால் அந்த கூடாரங்கள் சட்டவிரோதமானது என கூறி வனத்துறையினர் அகற்றிவிட்டனர்" என்றார். தனது குடும்பத்தை சேர்ந்த 9 பேரை இழந்த சுனிதா பார்டி என்ற பெண், " நாங்கள் அங்கு (மலையடிவாரப்பகுதி) சென்று நிரந்தரமாக வாழப்போவதில்லை. நாங்கள் என்ன பாவம் செய்தோம்?. நாங்கள் அங்கு சென்று இருந்தால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும். எங்கள் உயிருக்கு மதிப்பு கிடையாதா?" என்று கண்ணீர் மல்க கூறினார். பழங்குடியின மக்களை மலையடிவாரத்தில் தங்கவிடாமல் தடுத்த வனத்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நவநிர்மாண் சேனா மூத்த தலைவர் பாலா நந்காவ்கர் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story