மும்பை- கோவா இடையே வந்தே பாரத் ரெயில் சேவை - பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்


மும்பை- கோவா இடையே வந்தே பாரத் ரெயில் சேவை - பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 25 Jun 2023 7:45 PM GMT (Updated: 25 Jun 2023 7:46 PM GMT)

மும்பை-கோவா இடையே வந்தே பாரத் ரெயில் சேவை நாளை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

மும்பை,

மும்பை-கோவா இடையே வந்தே பாரத் ரெயில் சேவை நாளை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

வந்தே பாரத் ரெயில் சேவை

மும்பையில் இருந்து ஏற்கனவே காந்திநகர், சோலாப்பூர், ஷீரடி இடையே வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது மற்றொரு வழித்தடமான மும்பை-கோவா இடையே வந்தே பாரத் ரெயில் சேவை இயக்கப்பட உள்ளது. இது தொடர்பாக மத்திய ரெயில்வே அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளது. நாளை(செவ்வாய்க்கிழமை) பிரதமர் மோடி காணொளி வாயிலாக மும்பை-கோவா வந்தே பாரத் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இது குறித்து மத்திய ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி டாக்டர் சிவராஜ் மனஸ்புரே கூறியதாவது:- வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அறிமுகம் சுற்றுலா பயணிகளுக்கு கணிசமாக பயன் அளிக்க உள்ளது.

டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

இயற்கை எழில் கொஞ்சும் சயாத்ரி மலைத்தொடர், கடற்கரைகள் போன்றவற்றை பயணத்தில் கண்டு களிக்கலாம். ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து நாளை தொடங்கி வைக்கிறார். இந்த ரெயில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நாளை மறுநாள்(புதன்கிழமை) முதல் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (திங்கட்கிழமை) தொடங்கப்பட உள்ளது. சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் இருந்து 29-ந்தேதி அதிகாலை 5.25 மணிக்கு புறப்பட்டு (வண்டி எண் 22229) அன்றைய தினம் பிற்பகல் 3.30 மணி அளவில் மட்காவ் ரெயில் நிலையம் சென்றடையும். இந்த ரெயில் தாதர், தானே, பன்வெல், கேட், ரத்னகிரி, கன்காவ்லி, திவிம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

வாரத்தில் 6 நாட்கள் இயக்கம்

மறுமார்க்கமாக மட்காவில் இருந்து 29-ந் தேதி மதியம் 12.20 மணிக்கு புறப்படும் ரெயில்(வண்டி எண் 22230) அன்று இரவு 10.25 மணி அளவில் மும்பை வந்தடையும். இந்த ரெயில் வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமையும், அதேபோல மட்காவில் இருந்து செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும். பருவமழைக்கு பிறகு அதாவது நவம்பர் 1-ந்தேதி முதல் மும்பை-கோவா இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் வெள்ளிக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும். மேலும் காலநேரம் மாற்றம் செய்யப்படும் இவ்வாறு அவர் கூறினார்.


Next Story