திருமணத்திற்கு தயாராக இருக்கிறீர்களா?


திருமணத்திற்கு தயாராக இருக்கிறீர்களா?
x
தினத்தந்தி 14 Oct 2018 10:58 AM GMT (Updated: 14 Oct 2018 10:58 AM GMT)

நீங்கள் திருமண வயதை அடைந்து வாழ்க்கைத் துணை தேடுபவராக இருந்தால், ஆண் என்றால் பெண் பார்க்க சென்றிருப்பீர்கள்.

பெண்ணை பார்த்திருப்பீர்கள். ஒருசில முறை சந்தித்து பேசியிருப்பீர்கள். ஆனாலும் ‘இந்த பெண் தன்னோடு பொருந்திவாழ்வாரா?’ என்ற சந்தேகமோ, தயக்கமோ உங்களுக்கு இருக்கலாம். அதுபோல் உங்களைப் பார்த்த, பேசிய, பேசிக்கொண்டிருக்கிற அந்த பெண்ணுக்கும் சில தயக்கங்கள் ஏற்பட்டு, முடிவெடுக்க அவரும் தடுமாறிக்கொண்டிருக்கலாம். அப்படிப்பட்ட சூழலில் நீங்கள் இருந்தால், நீங்கள் திருமணத்தில் ஒரு தெளிவான முடிவுக்குவர கீழ்கண்ட கேள்விகள் உதவும்.

கேள்விகளை தொடர்ந்து படியுங்கள்!

பெண் பார்க்கும் சடங்கில் இருவரும் பார்த்திருப்பீர்கள். பலமுறை பேசியிருப்பீர்கள். இதுவரை கிடைத்த தகவல்களை அடிப்படையாகவைத்து இருவரும் முழுமையாக ஒருவரை ஒருவர் நம்புகிறீர்களா?

தன்னலம், சுயநலம், தனிப்பட்ட விருப்பு-வெறுப்புகளில் இருந்து விடுபட்டு, இருவரும் ஒருங்கிணைந்து விட்டுக்கொடுத்து வாழ முடியும் என்று நினைக்கிறீர்களா?

ஒருவருக்கொருவர் ஓரளவாவது தியாகம் செய்ய முடியும் என்று இருவருமே கருதுகிறீர்களா?

மாறுபட்ட உணர்வுகளும், செயல்களும் இருவரிடமுமே இருக்கும். இருவரின் மகிழ்ச்சிக்காக அவைகளில் இருந்து விடுபட்டு வெளியே வந்து ஒன்றிணைந்து வாழ முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு ஏற்படுகிறதா?

அனைத்துவிதமான சுகங்களிலும், துக்கங்களிலும் மனதொத்து வாழ முடியும் என்று நம்புகிறீர்களா?

வேலை பார்ப்பது அல்லது வேலையில் இருந்து விலகுவது, இரண்டிலும் ஒத்தகருத்தை மேற்கொள்ள முடியும் என்று கருதுகிறீர்களா?

குடும்ப செலவுகள் உள்பட வீட்டு பொருளாதார சூழ்நிலைகள் அனைத்திலும் ஒன்றுபட்டு முடிவெடுக்கும் அதிகாரம் இருவருக்குமே உண்டு என்ற கருத்தில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?

நண்பர்களை பற்றி முரண்பட்ட கருத்துக்கள் தோன்றினால், பேசி தீர்த்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?

ஓய்வுப்பொழுதை எப்படி கழிக்க வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து ஏற்படுகிறதா?

இருவரும் பிரிந்திருக்கும்போது பிரிவு வாட்டுகிறதா? எப்போது பார்ப்போம் என்ற ஏக்கம் தோன்றுகிறதா?

எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்? எத்தனை குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்? என்பதில் ஒருமித்த எண்ணம் ஏற்படும் என்று கருதுகிறீர்களா?

எந்த பிரச்சினை ஏற்பட்டாலும், பேசி தீர்த்துக்கொள்வோம் என்ற நம்பிக்கை உள்ளதா?

பாராட்டும் குணமும் மன்னிக்கும் குணமும் இருக்கிறதா?

இருவரது குடும்பத்தினர் மீதும் வேறுபாடு இன்றி அன்பு செலுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளதா?

ஒருபோதும் எந்த வகையிலும் வாழ்க்கைக்குள் மூன்றாம் நபர் ஒருவரை அனுமதிக்க மாட்டேன் என்று உறுதி கூற முடியுமா?

ஆணும், பெண்ணும் எல்லாவிதத்திலும் சமம்தான் என்ற கருத்தை முழுமனதோடு ஏற்றுக்கொள்வீர்களா?

மேற்கண்ட கேள்விகளுக்கெல்லாம் “ஆம்” என்பது உங்கள் இருவரின் பதிலாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் நீங்கள் திருமணத்தில் இணையும் மணவாழ்க்கை சிறக்கும். அல்லது “ஆம்” என்று சொல்லும் நிலைக்கு மனம் பக்குவம் அடையும் வரை காத்திருங்கள். யாரோடு உங்கள் மனம் “ஆம்” சொல்லுமோ அவரோடு வாழ்க்கையில் இணையுங்கள்.

Next Story