தண்ணீர் வழங்கும் ‘தாக நாயகன்’


தண்ணீர் வழங்கும் ‘தாக நாயகன்’
x
தினத்தந்தி 28 Oct 2018 10:27 AM GMT (Updated: 28 Oct 2018 10:27 AM GMT)

ஏழைகள், கூலி தொழிலாளர்களின் தண்ணீர் தாகத்தை போக்கும் சேவையில் ஈடுபட்டிருக்கிறார், ஆலகாரத்தினம் நடராஜன்.

தெற்கு டெல்லி பகுதியில் தொழிலாளர்களின் தாகத்தை தணிப்பதற்காக 80 இடங்களில் மண்பானைகளை நிறுவியுள்ளார். தினமும் அந்த மண்பானைகளில் சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான, குளிர்ச்சியான நீரை நிரப்பிக் கொண்டிருக்கிறார். இதற்காக ஒரு வாகனத்தை பயன்படுத்துகிறார். அதில் பொருத்தியிருக்கும் ‘டேங்க்’ மூலம் தினமும் 2 ஆயிரம் லிட்டர் தண்ணீரை சப்ளை செய்து வருகிறார். பானைகளில் நிரப்பப்பட்டிருக்கும் தண்ணீர் தீர்ந்து போனால் மீண்டும் நிரப்புவதற்கு வசதியாக அதில் தன்னுடைய செல்போன் எண்ணையும் குறிப்பிட்டு இருக்கிறார். தண்ணீர் தீர்ந்ததும் யாராவது போன் செய்து தகவல் கொடுக்கிறார்கள். உடனே இவர் தண்ணீர் கொண்டு வந்து நிரப்புகிறார்.

69 வயதாகும் நடராஜனின் பூர்வீகம் பெங்களூரு. என்ஜினீயரிங் படித்தவர். படித்து முடித்ததும் லண்டன் சென்றவர் அங்கு 30 ஆண்டுகளாக சுயதொழில் செய்து நல்ல வருமானம் ஈட்டியிருக்கிறார். எதிர்பாராதவிதமாக புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார். அதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்ததால் முறையாக சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். அதன்பிறகு அங்கிருந்து இந்தியாவுக்கு திரும்பி வந்துள்ளார். டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரியுடன் இணைந்து தன்னைபோல் புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் ஊட்ட தொடங்கி இருக்கிறார். அப்போது தெருவில் நடந்து செல்பவர்களின் தாகத்தை தணிப்பதற்காக தனது வீட்டின் முன்பு மண்பானை ஒன்றை அமைத்து அதில் தண்ணீர் நிரப்பி வைத்திருக்கிறார். அவர் குடியிருக்கும் பகுதியில் வசதியானவர்கள் வசிக்கிறார்கள். கூலி தொழிலாளர்கள், ஏழைகள் அங்கு வந்து தண்ணீர் குடித்து செல்வது அங்கு வசிக்கும் வசதி படைத்தவர்களுக்கு பிடிக்கவில்லை. அங்கு மண்பானை அமைக்கக்கூடாது என்று நடராஜனிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார்கள். அவரோ ‘தண்ணீர் அனைத்து தரப்பினருக்கும் அத்தியாவசியமானது’ என்று கூறி தன்நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

அந்த சம்பவம்தான் மற்ற பகுதிகளில் மண்பானைகள் அமைத்து தண்ணீர் வழங்கும் எண்ணத்தை உண்டாக்கி இருக்கிறது. காலையில் எழுந்ததும் காரில் உள்ள டேங்கரில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு ஒவ்வொரு இடமாக சென்று பானைகளில் தண்ணீர் நிரப்பி வருகிறார். ஆரம்பத்தில் அவரை அரசு சார்பில் தண்ணீர் ஊற்றுவதற்காக நியமிக்கப்பட்ட நபராகவே பலரும் கருதியிருக்கிறார்கள். பின்பு அவருடைய சேவையை பாராட்டி மண்பாண்ட நீர் நாயகன் என்று அழைக்க தொடங்கி விட்டார்கள்.

‘‘நான் என்னுடைய சேமிப்பு பணத்தில் இருந்துதான் செலவு செய்கிறேன். என்னுடைய பணியை பாராட்டி ஒருசிலர் உதவ முன்வந்திருக்கிறார்கள். குடும்பத்தினரின் பங்களிப்பும், ஒத்துழைப்பும்தான் என்னை தொடர்ந்து சேவை செய்ய வைத்துக் கொண்டிருக்கிறது’’ என்கிறார்.


Next Story