தெற்கு ரெயில்வேயால் புறக்கணிக்கப்படும் தமிழகம்..!


தெற்கு ரெயில்வேயால் புறக்கணிக்கப்படும் தமிழகம்..!
x
தினத்தந்தி 16 March 2019 9:08 AM GMT (Updated: 16 March 2019 9:08 AM GMT)

இந்திய ரெயில்வேயிலேயே முக்கிய அங்கம் வகிக்கும் தெற்கு ரெயில்வே, பல கவுரவத்தை தன்னகத்தே கொண்டு இருக்கிறது.

முறையான டிக்கெட் எடுத்து பயணிக்கும் பழக்கத்தை 100 சதவீதம் பேர் கடைபிடிக்கும் பெருமை தெற்கு ரெயில்வேக்கு உண்டு. அந்த வகையில் நாட்டிலேயே அதிக வருவாய் ஈட்டித்தந்து பெருமை சேர்ப்பது தெற்கு ரெயில்வே தான்.

ஆனால் தெற்கு ரெயில்வேயின் அச்சாணியாக விளங்கும் தமிழகத்துக்கு உரிய கவுரவம் கிடைக்கப் பெறாதது வருத்தமான விஷயம். அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ரெயில்வே துறையில் ஏராளமானோர் அதிகாரிகள் பணியிடங்களில் கோலோச்சுகிறார்கள். இதனால் கேரளாவில் ரெயில்வே திட்டங்கள் பலன் அதிகம் கிடைத்து வருகிறது.

கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் காசரகோடு-மூகாம்பிகா ரோடு பயணிகள் ரெயில், திருவனந்தபுரம்-நிசாமுதீன் வாராந்திர ரெயில்கள் (கோட்டையம் மற்றும் ஆலப்புழா வழியாக), கன்னியாகுமரி-புனலூர் பயணிகள் ரெயில், ஹட்டியா-எர்ணாகுளம் வாராந்திர ரெயில், கொச்சுவேலி-இந்தூர் வாராந்திர ரெயில், அவுரா-எர்ணாகுளம் அந்தியோதயா வாராந்திர ரெயில், புனலூர்-பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ், மங்களூரு-கொச்சுவேலி அந்தியோதயா வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ், கன்னூர்-ஆலப்புழா ரெயில், கொச்சுவேலி-பனாஸ்வாடி எக்ஸ்பிரஸ் என 12 ரெயில்கள் புதிதாக அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.

இது தவிர சென்னை-பழனி எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர்-பழனி ரெயில் பாலக்காடு வரையும், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் கொல்லம் வரையிலும், பாலருவி எக்ஸ்பிரஸ் நெல்லை வரையிலும், கொல்லம் எடமன் பயணிகள் ரெயில் செங்கோட்டை வரையிலும் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளன. ஆனால் தமிழகத்துக்கு தாம்பரம்-நெல்லை அந்த்யோதயா எக்ஸ்பிரஸ், கோவை- பெங்களூரு உதயா எக்ஸ்பிரஸ், சென்னை-மதுரை தேஜாஸ் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட முழு நேர ரெயில் களே இயக்கப்பட்டு உள்ளன. தாம்பரம்-நாகர்கோவில் வாரம் 3 முறை எக்ஸ்பிரசும் இயக்கப்படுகிறது.

திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, கோட்டயம், எர்ணாகுளம், சொரனூர், காசர்கோடு, திருச்சூர், கண்ணூர் போன்ற கேரளா மாநில பயணிகள் ரெயில்களில் சென்னைக்கு வருகிறார்கள். ஆனால் மதுரை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி போன்ற முக்கியமான ரெயில் வழித்தடங்கள் இருந்தும், 70 சதவீத பயணிகள் சென்னைக்கு பஸ்களில் வரவேண்டிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

மக்கள் தொகை, பரப்பளவு உள்ளிட்டவற்றில் கேரளாவை விட தமிழகம் பெரியது. இருந்தாலும் ரெயில்வே திட்டங்களில் கேரளாவுக்கு கொடுக்கும் முன்னுரிமை தமிழகத்துக்கு தரப்படுவதில்லை. நமது தமிழக எம்.பி.க்களும் புதிய ரெயில்களை கேட்டு பெறவில்லை. 2012-ம் ஆண்டுக்கு பிறகு முக்கிய வழித்தடமான சென்னை-கன்னியாகுமரி இடையே இரவு நேர புதிய ரெயில் இயக்கப்படவில்லை. சென்னை-செங்கோட்டை அந்த்யோதயா ரெயிலும் இயக்கப்படவில்லை. ஆனால் அறிவிப்பு மட்டுமே வெளியானது. இதன் மூலம் தெற்கு ரெயில்வேயால் தமிழகம் புறக்கணிக்கப்படுவது தெளிவாகிறது.

நெல்லை மாவட்டத்தில் சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம் போன்ற பகுதி மக்களுக்கு நேரடியாக சென்னை வருவதற்கான ரெயில்கள் இல்லை. தூத்துக்குடியில் இருந்து நாகர்கோவில், திருவனந்தபுரம் மார்க்கமாகவும் ரெயில் சேவை இல்லை. தேவையான ரெயில்கள் இயக்கப்படாததால் கன்னியாகுமரி, மார்த்தாண்டம், திருச்செந்தூர், தூத்துக்குடி, நாகர்கோவில், நெல்லை, செங்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து பஸ்களே அதிகம் இயக்கப்படுகிறது. இதனால் தாம்பரம், கிண்டி, பெருங்களத்தூர், கோயம்பேடு போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துகளும் ஏற்படுகின்றன.

எனவே கிழக்கு கடற்கரை ரெயில் பாதை திட்டமானது கன்னியாகுமரியில் தொடங்கி கூடங்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, காயல்பட்டினம், ஆறுமுகநேரி, சாயல்குடி, ஏர்வாடி, கிழக்கு ராமநாதபுரம் (காரைக்குடி வழியாக) இணைத்தாலே தென்மாவட்டங்கள் சிறந்த பலனை அடையும். பல புதிய ரெயில்களும் உருவாகும். துறைமுகங்களுக்கு நேரடி தொடர்பு ஏற்படுவதால், தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்லமுடியும்.

தென்மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிகளவில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், திருவொற்றியூர், ஆவடி, அம்பத்தூர், செங்குன்றம், மாதவரம், அயனாவரம், பெரம்பூர், ராயபுரம், காசிமேடு போன்ற பகுதிகளில் அதிகமாக மக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் வடசென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில் பயணிகளுக்கு வசதியாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட தண்டையார்ப் பேட்டையில் முனையம் அல்லது ரெயில் பழுது பார்க்கும் மையம் அல்லது ரெயில் நிறுத்தி வைக்கும் இடத்தை ஏற்படுத்தி தரவேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் 20 நிமிடத்துக்கு ஒரு ரெயிலை எழும்பூரில் இருந்து இயக்கமுடியும். அப்படி இயக்கும் பட்சத்தில் சென்னையில் நெரிசலும், விபத்துகளும் உயிரிழப்புகளும் குறையும்

கேரளா எம்.பி. பிரேமசந்திரன் டெல்லியில் ரெயில்வே வாரியத்தில் 3 நாட்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு, கொல்லம்- சென்னை எழும்பூர் இடையே நிரந்தர ரெயில் இயக்க அனுமதி பெற்று தந்தார். இதையடுத்து சென்னை- செங்கோட்டை இடையேயான அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்கவும் முயற்சி செய்கிறார்.

இதற்கிடையில் தாம்பரம்- நெல்லை அந்தியோதயா ரெயில் நாகர்கோவிலுக்கும், திருச்சி- நெல்லை இண்டர்சிட்டி ரெயில் திருவனந்தபுரத்துக்கும் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. மதுரை- கன்னியாகுமரி, மணியாச்சி-தூத்துக்குடி, நாகர்கோவில்-திருவனந்தபுரம் போன்ற இருவழிப்பாதை திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது வரவேற்கத்தக்கது. தென்னக ரெயில்வே அதிகாரிகள் கேரளாவுக்கு காட்டும் அக்கறையை தமிழகத்துக்கும் காட்ட வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் குமரி, நெல்லை போன்ற தென் மாவட்ட மக்கள் ஆன்மிக தலமான வேளாங் கண்ணிக்கு போக சிறப்பு ரெயிலைக்கூட இயக்க முன்வரவில்லை. ஆனால் எர்ணாகுளம், கோட்டயம், கொல்லம் மக்களுக்கு வசதியாக வாரம் இரண்டு முறை நிரந்தர ரெயிலை இயக்க உள்ளது.

தஞ்சாவூர், திருச்சி இருவழிபாதை அமைக்க மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். மன்னார்குடி-பட்டுக்கோட்டை, தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை, திருத்துறைபூண்டி- நாகப்பட்டினம், பேரளம்- காரைக்கால் போன்ற முக்கிய வழித்தடங்களில் புதிய பாதை அமைக்க வேண்டும்.

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து எல்லா பகுதிகளுக்கும் ரெயில்கள் இயக்க நடவடிக்கை வேண்டும், முக்கிய வழித்தடமான சென்னை-கன்னியாகுமரி, எழும்பூர்-செங்கோட்டை இடையே கூடுதல் ரெயில்கள் இயக்கவேண்டும், கிழக்கு கடற்கரை ரெயில் பாதை திட்டத்தை உடனடியாக செயல்படுத்தவேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியே எங்கள் தென்மாவட்ட ரெயில் பயணிகள் சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது. மேற்கண்ட நடவடிக்கைகள் சாத்தியமாகும்போது தென்மாவட்ட மக்களின் சிரமம் தவிர்க்கப்படுவதுடன், நாட்டுக்கே அது கூடுதல் வருவாயை ஈட்டித்தரும். இதனை நிஜமாக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழகத்தின் பெருமை தெற்கு ரெயில்வேயில் இன்னும் கூடுதலாக ஒலிக்க வேண்டும். 

- தேவ் ஆனந்த், தலைவர், தென் மாவட்ட ரெயில் பயணிகள் சங்கம்.

Next Story