உடலை பெரிதாக்கும் விஷ மீன்


உடலை பெரிதாக்கும் விஷ மீன்
x
தினத்தந்தி 6 Sep 2021 7:49 AM GMT (Updated: 6 Sep 2021 7:49 AM GMT)

கடலில் காணப்படும் மீன் வகைகளில் வினோதமாக காட்சியளிப்பது, ‘பேத்தை மீன்.’

கடலில் காணப்படும் மீன் வகைகளில் வினோதமாக காட்சியளிப்பது, ‘பேத்தை மீன்.’ இதற்கு ‘தவளை மீன்’, ‘முள்ளம்பன்றி மீன்’ என பல்வேறு பெயர்கள் உண்டு. இந்த மீனை ஆங்கிலத்தில் ‘பப்பர் பிஷ்’ என்பார்கள். அதிக அளவில் நச்சுத் தன்மை கொண்ட மீன்களில் இதுவும் முக்கியமான ஒன்றாக அறியப்படுகிறது. இந்த மீன் ஜப்பானில் ‘புகு’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

* இந்த வகை மீனில் கிட்டத்தட்ட 200 வகையான இனங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் பல வண்ணங்களில், வித்தியாசமான உடலமைப்பைக் கொண்டிருக்கின்றன.

* ஆழம் குறைந்த இடத்தில் வாழக்கூடிய இவ்வகை மீன்கள், தன்னுடைய உடலமைப்பை, 10 மடங்காக பெரிதாக்கும் தன்மை கொண்டது. அப்படி பெரிதாக்கும்போது, அது ஒரு பலூன் போல காணப்படும். எதிரிகளிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காகவே இப்படிச் செய்கிறதாம்.

* மெதுவாக நீந்தும் தன்மை கொண்ட இந்த மீன்களின் உடலில் முட்கள் நிறைந்திருக்கும்.

* இதன் பற்கள் மிகவும் பலம் பொருந்தியவை. சிறிய வகை மீன்கள் எது சிக்கினாலும், தன்னுடைய பற்களால் அவற்றை துண்டு துண்டுகளாக்கி உட்கொள்ளும்.

* இந்த மீனை, எந்த பெரிய மீனும் சாப்பிடுவதில்லை. அப்படியே தவறி எந்த மீனாவது இதனை சாப்பிட்டுவிட்டால், தன்னுடைய உடலைப் பெரியதாக்கி, விழுங்கிய மீனையே ஆபத்தில் சிக்க வைத்துவிடும்.

* இந்த மீனின் உடல் முழுவதும் நச்சுத் தன்மை இருந்தாலும், தலைப்பகுதியில் தான் அதிக அளவு நஞ்சு இருக்கிறது. இது 30 பேரை கொல்லும் அளவுக்கான நஞ்சு கொண்டது. ஆனாலும் இது ஜப்பானில் ஆண்டுக்கு 1000 டன் அளவுக்கு உணவுக்காக விற்பனை செய்யப்படுகிறது. ஜப்பானில்தான் இந்த மீனை அதிகமாக சாப்பிடுகிறார்கள். அங்கு இதனை சமைக்க தனி படிப்பே இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.


Next Story